| ADDED : ஆக 03, 2011 01:31 AM
பொள்ளாச்சி : திருப்பூரில் நடந்த 'ரத்த கொடையாளர்கள் பாராட்டு விழாவில்' பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு விருது வழங்கப்பட்டது. முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் திருப்பூரில் ரத்த கொடையாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு விருது வழங்கப்பட்டது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது: முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் கடந்த 2009 முதல் ரத்த தான முகாம்கள் நடந்து வருகிறது. இதில் கோவை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, உடுமலை, தாராபுரம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகள் போன்றவற்றுடன் இணைந்து 5,000 'யூனிட்கள்' ரத்தம் பெறப்பட்டுள்ளது. இதில் 3,500 'யூனிட்' ரத்தம் அரசு மருத்துவமனைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 1,443 'யூனிட்' ரத்தம் முகாம்கள் மூலம் பெறப்பட்டது. ரத்த கொடையாளர்கள் பாராட்டு விழாவில், ரத்தம் வழங்கிய கொடையாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ரத்த தான முகாமில் ஆற்றிய சேவைக்காக விருது வழங்கப்பட்டது பெருமை தரக்கூடியதாக உள்ளது, என்றனர்.