உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / "ஹைடெக் முறையில் கழிவு நீர் அகற்றம் :முன்மாதிரியாக திகழும் ஆசிரமம்

"ஹைடெக் முறையில் கழிவு நீர் அகற்றம் :முன்மாதிரியாக திகழும் ஆசிரமம்

பொங்கலூர் : பொங்கலூர் அருகே பல்லவராயன்பாளையத்தில் உள்ள ராம்சந்தர மிஷன் ஆசிரமத்தில், பக்தர்களால் பயன்படுத்தப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு செடிகளுக்கு பாய்ச்சப்படுகிறது.இங்கு வரும் பக்தர்கள், தப்பித்தவறி கூட பீடி, சிகரெட் புகைப்பதில்லை. எந்த ஒரு இடத்திலும் குப்பையை காண முடியாது. பரந்து விரிந்துள்ள 100 ஏக்கர் காட்டிலும், அவ்வளவு தூய்மை. 20 ஆயிரம் பேர் வரை அமரக்கூடிய தியான மண்டபம் உள்ளது.இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை குரு பூஜை விழா நடத்தப்படுகிறது. வாரநாட்களில் ஞாயிற்றுக்கிழமை சொற்ப அளவிலான பக்தர்களே ஆசிரமத்துக்கு வருகின்றனர். அவர்களுக்கு சமையல் செய்து உணவு வழங்கப்படுகிறது. சமையல், குளியல் மற்றும் மலக்கழிவு நீர் போன்றவை வெளியே விடப்படுவதில்லை. நவீன முறையில் சுத்திகரிக்கப்படுகிறது.கழிவு நீர், பெரிய தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. பின், மோட்டார் மூலம் உறிஞ்சப்பட்டு நுண்ணுயிர் வளர்ப்பு தொட்டிக்கு மாற்றப்படுகிறது. அங்கு கழிவு நீரில் உள்ள தீமை செய்யும் பாக்டீரியாக்களை நுண்ணுயிரிகள் உண்டு வாழ்கின்றன. இதனால், கழிவு நீரில் கலந்திருக்கும் பாக்டீரியாக்கள் நீக்கப்படுகின்றன. இங்கு வாழும் நுண்ணுயிரிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் மோட்டார் மூலம் தண்ணீருக்குள் செலுத்தப்படுகிறது. இது, 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், நீர் தெளிவு தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. அங்கு படிந்திருக்கும் நுண்ணுயிர்களால் மீண்டும் சுத்திகரிக்கப்படுகிறது. பின், நுண்ணுயிர் வளர்ப்பு தொட்டிக்கு மாற்றப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. தெளிந்த நீரானது, மறுபடியும் தொற்று நீக்கித்தொட்டிக்கு மாற்றப்பட்டு, அங்கும் கிருமிகள் நீக்கப்படுகின்றன.பின், பல்லடுக்கு வடிகட்டிக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து கார்பன் வடிகட்டிக்கு வந்து சேர்கிறது. இங்கு தீங்கு செய்யும் கிருமிகள் மற்றும் கழிவுகள் பிரிக்கப்பட்டு, நன்கு சுத்திகரிக்கப்பட்ட நீராக மாற்றப்படுகிறது. பின், சுத்திகரிக்கப்பட்ட நீர்த்தொட்டிக்கு மாற்றப்படுகிறது. இங்கு மோட்டார் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு, சொட்டு நீர் குழாய்கள் வழியாக ஆசிரம வளாகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மரம், செடிகளுக்கு பாய்ச்சப்படுகிறது. இங்குள்ள மரங்களால், ஆசிரமம் இயற்கை சூழலில் மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது.திருப்பூரில் எங்கு பார்த்தாலும் கழிவு நீர் மற்றும் சாயக்கழிவு பிரச்னை தீராத தலைவலியாக இருக்கும் நிலையில், திருப்பூருக்கு அருகே உள்ள இந்த ஆசிரமம் சத்தமில்லாமல் சாதனை பயணத்தை துவக்கியுள்ளது வரவேற்கத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி