பொள்ளாச்சி : அரசின் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்திற்காக, கோவை
மாவட்டத்தில், இரண்டு 'பைலட்' ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த
ஊராட்சிகளில் வரும் 8ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த
அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நிலமற்ற,
ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆடுகள் வழங்கப்படும் என, முதல்வர் ஜெ.,
அறிவித்தார். வரும் ஐந்தாண்டுகளில் மாநிலம் முழுவதும் ஏழு லட்சம்
குடும்பங்களுக்கு இலவச ஆடுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.கால்நடை
பராமரிப்பு துறை சார்பில் ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் குறித்த பட்டியல்
தயாரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் கோவை, ஈரோடு, நீலகிரி,
தேனி, திருநெல்வேலி, காஞ்சிபுரம் உட்பட 12 மாவட்டங்களுக்கு முதல்கட்டமாக
ஆடு வழங்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும், தலா இரண்டு 'பைலட்' ஊராட்சிகள்
தேர்வு செய்யப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. நடப்பாண்டில்,
ஒரு லட்சம் குடும்பத்திற்கு ஆடுகள் வழங்கப்படவுள்ளது. செம்மறி மற்றும்
வெள்ளாடுகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, தற்போது 135 கோடி ரூபாய்
நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி வடக்கு
ஒன்றியத்தில் ஏ.நாகூர் ஊராட்சியும், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில்,
அத்திபாளையம் ஊராட்சியும் 'பைலட்' ஊராட்சிகளாக தேர்வு
செய்யப்பட்டுள்ளது.ஒன்றிய அதிகாரிகள் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள்
கூறியதாவது:ஏழைகளுக்கு ஆடுகள் வழங்கும் திட்டத்தை வரும் செப்., 15ம் தேதி
முதல்வர் துவங்கவுள்ளார். இதற்காக, கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக இரண்டு
ஊராட்சிகள் மட்டும் மாதிரி ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த
ஊராட்சிகளில், சிறப்பு கிராம சபை நடப்பது குறித்து ஊராட்சி தலைவர் சார்பில்
'தண்டோரா' போட்டு பொதுமக்களுக்கு தெரியப்படுத்த
அறிவுறுத்தப்பட்டுள்ளது.வரும் 8ம் தேதி காலை 11.00 மணிக்கு கூட்டம்
நடக்கிறது. இதில், திட்டம், அதன் பயன்கள் குறித்து கால்நடைத்துறை
டாக்டர்கள் விளக்குவர். ஊராட்சிகளில் ஆடு, மாடு வைத்திருக்காத 60 முதல் 80
வயதுடைய பெண் பயனாளிகளை தேர்வு செய்யும் பணியும் துவங்கப்படவுள்ளது,
என்றனர்.