| ADDED : ஆக 14, 2011 02:38 AM
கோவை : கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் மின்சாரம் தாக்கி
உயிரிழந்ததையடுத்து, இனி கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தொடர்பான
பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தவும், நன்கொடை வசூலிக்கவும் தடை விதிக்க
திட்டக்குழு உறுப்பினர் பாலகுருசாமி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
அத்துடன், விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு
வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். கோவை கல்லூரி மாணவர்கள் மூன்று பேர்
மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குறித்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர்
விரிவான அறிக்கை கேட்டுள்ளார். இதன் அடிப்படையில் மத்திய திட்டக்குழு
உறுப்பினரும், அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தருமான பாலகுருசாமி
தலைமையில், கோவை அண்ணா பல்கலை பதிவாளர் பிரேம் சந்த், டீன் சரவணக்குமார்,
மாணவர் நல அலுவலர் சுபா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று கல்லூரிக்கு
சென்று விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். கல்லூரி முதல்வர், துறைத்
தலைவர், ஆசிரியர்கள், விடுதி வார்டன், காவலாளி ஆகியோரிடம் விசாரணை
நடத்தினர். இதன் பின், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்
சக்திகுமார் எனும் மாணவனிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதோடு,
விரைவில் நலம் பெறவும் ஆறுதல் கூறினர். நடந்த சம்பவங்கள் குறித்து அரசுக்கு
இக்குழு விரிவான அறிக்கை அனுப்பியுள்ளது.இது குறித்து திட்டக்குழு உறுப்பினர் பாலகுருசாமி கூறுகையில், ''உயர்
மின்னழுத்த கம்பியின் அடியில் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது. இரவு
நேரத்தில் மாணவர்களுக்கு வழிகாட்ட எவரும் இல்லாததால் அவர்களுக்கு இது
குறித்து தெரியவில்லை. கல்லூரி நிர்வாகத்தின் அஜாக்கிரதை மற்றும்
பொறுப்பின்மைதான் காரணம் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. வார்டனிடம்
நடத்திய விசாரணையில், 'இரவு 9.00 மணிக்கு மேல் மாணவர்கள் வெளியே செல்ல தடை
விதித்திருந்ததாகவும், தடையை மீறி மாணவர்கள் சென்று விட்டதாகவும்'
கூறினார். மாணவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத்
தொகை வழங்கவும், அவர்களிடம் இதுவரை பெற்ற கட்டணங்களை திருப்பிக்
கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளோம். கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள்
தொடர்பான பணிகளில் இனி மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது, தனியாக கூலியாட்களை
பயன்படுத்திதான் பணிகளை நிறைவேற்ற வேண்டும், நன்கொடை வசூலிக்கவும்,
ஸ்பான்சர் பிடிக்கவும் மாணவர்களை ஏவக் கூடாது என்பன உள்ளிட்ட உத்தரவுகளை
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் செயல்படுத்த பரிந்துரை
செய்துள்ளோம்.இவ்வாறு, பாலகுருசாமி கூறினார்.