கோவை : கோவை நகரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட ஆறு பேரை தனிப்படை போலீசார்
நேற்று கைது செய்தனர். இக்கும்பலிடம் இருந்து 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான
தங்க நகை மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.கோவை நகரிலுள்ள பீளமேடு,
சிங்காநல்லூர், சரவணம்பட்டி பகுதி வீடுகளில் கடந்த சில மாதங்களாக நகை, பணம்
திருட்டுச் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தன. குற்றவாளிகளை பிடிக்க,
குற்றம் மற்றும் போக்குவரத்து துணைக்கமிஷனர் (பொறுப்பு) விவேகானந்தன்,
மாநகர கிழக்குப்பகுதி குற்றப்பிரிவு உதவிக் கமிஷனர் பாலாஜி சரவணன்
மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் தனி போலீஸ் படை
அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.கேரளா மாநிலம், கொடுவாயூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் (47), திருப்பூர்
மாவட்டம், உடுமலை, பொன்னேரியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (36), விழுப்புரம்
மாவட்டம், திண்டிவனம், உலகூரைச் சேர்ந்த சதீஷ்(25), உளுந்தூர்பேட்டை,
மலையனூரைச் சேர்ந்த சக்திவேல் (24), செல்வராஜ்(24), கடலூர் மாவட்டம்,
சிதம்பரத்தைச் சேர்ந்த பழனி (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள்
அளித்த வாக்குமூலத்தின் பேரில் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள்
மற்றும் பொருட்கள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கான நடவடிக்கையில்
ஈடுபட்ட தனிப்படை போலீசாரை கமிஷனர் அமரேஷ்புஜாரி நேற்று
பாராட்டினார்.கமிஷனர் அமரேஷ் புஜாரி கூறியதாவது:கோவை நகரில் திருட்டு,
வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குற்றத்தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் அதே வேளையில், குற்றவாளிகளை கைது
செய்யும் நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. சப்-டிவிஷன் தோறும் தலா
ஒரு போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்பு குற்ற வழக்குகளை கையாண்ட
அனுபவம் மிகுந்த போலீசாரை தேர்வு செய்து, இக்குழுவில் சேர்த்துள்ளோம். இதன்
மூலமாக பல்வேறு வழக்குகளின் புலன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரு மாதத்தில் மட்டும் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம்,
பொருட்கள் குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. குற்றம் தடுக்க
மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கை காரணமாக, கடந்த ஒரு மாதத்தில் வழிப்பறி
குறைந்துள்ளது. நடப்பு ஆண்டில் பதிவான வழக்குகளில் 75 சதவீத வழக்குகளில்
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அமரேஷ் புஜாரி
தெரிவித்தார்.