கோவை : அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர்கள்,
தனியார் நிலங்களை அபகரித்தது எப்படி? என்பது குறித்த தகவல்கள் போலீஸ்
விசாரணையில் அம்பலமாகியுள்ளது.தமிழக மேற்கு மண்டலத்திலுள்ள கோவை, நீலகிரி,
திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி
மாவட்டங்களில் நடந்த நில அபகரிப்பு தொடர்பாக 2,457 பேர் போலீசில் புகார்
அளித்துள்ளனர். இவர்கள் பறிகொடுத்ததாக கூறப்படும் நிலத்தின் மதிப்பு 512
கோடி ரூபாய் என போலீசார் மதிப்பிட்டுள்ளனர். நில அபகரிப்பு தொடர்பாக
சென்னை, சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி தொகுதி தி.மு.க., எம். எல்.ஏ.,
ஜெ.அன்பழகன், ஒமலூர் தொகுதி பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசன், சேலம்
மாநகராட்சி 9வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் 'ஆட்டோ' மாணிக்கம் உள்பட 67
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேலம்
மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாராலும், கோவை மாவட்ட தி.மு.க., துணைச்
செயலாளர் ஆனந்தன் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாராலும் கைது
செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ளனர். எப்படியெல்லாம் தனியார்
நிலங்கள் அபகரிக்கப்பட்டன? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில்
பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.நில அபகரிப்பு நடந்த விதம்: ஒரு வழக்கில்,
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலம்
சொத்துப் பிரிப்பு பிரச்னையில் இருந்தது. தகராறில் ஈடுபட்ட வாரிசுகளில்
இருவர் நிலத்தை விற்பனை செய்ய அரசியல் பிரமுகரை அணுகினர். இடைத்தரகர்
மூலமாக அவ்விருவருக்குச் சேர வேண்டிய சொத்துகளை குறைந்த விலைக்கு எழுதி
வாங்கிக்கொண்ட பிரமுகர், மற்ற மூவரையும் மிரட்டி, கட்டாயப்படுத்தி நிலத்தை
தனக்கு விற்க வேண்டுமென நிர்பந்தித்தார். வேறுவழியின்றி அவர்களும் நிலத்தை
அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.மற்றொரு நில அபகரிப்பு,
மிகவும் வித்தியாசமாக நடந்திருந்தது. ஒருவரது நிலத்தை சுற்றிலும் இருந்த
நிலங்களை ஆறு பேரிடம் விலைக்கு வாங்கிய அரசியல் பிரமுகர், நடுவில் இருந்த
நிலத்தையும் வளைத்துப்போடும் முடிவில் அந்த நிலத்தின் உரிமையாளரை அழைத்து
பேச்சு நடத்தினார். 'நிலத்தை விற்க விருப்பமில்லை' என அவர் உறுதியாக
இருந்ததால், 'உனது நிலத்துக்குச் செல்ல வழி கிடையாது' எனக்கூறி, தான்
வாங்கிய நிலத்தை சுற்றிலும் வேலி அமைத்தார். நடுவில் இருந்த தனது
நிலத்துக்குள் நுழைய முடியாமலும், பிறருக்கு விற்க இயலாமலும் பரிதவித்த
நிலத்தின் உரிமையாளர், கடைசியாக அந்த அரசியல் பிரமுகருக்கே விற்க வேண்டிய
நிர்பந்தம் ஏற்பட்டது.வக்கீலுக்கு நெருக்கடி: கோவை நகரின் மத்திய
பகுதிகளில் வசிக்கும் வக்கீல் மற்றும் அவரது சகோதரர்களுக்குச் சொந்தமான 2.5
@காடி மதிப்பிலான 14 சென்ட் நிலத்துடன் பங்களா உள்ளது. வக்கீல் தவிர்த்து,
பிற சகோதரர்களிடம் பேச்சு நடத்தி நிலத்தை பேரம் பேசிய கோவையைச் சேர்ந்த
அரசியல் தொடர்புடைய பிரமுகர், வக்கீலையும் உடன்பட நிர்பந்தம் செய்தார்.
கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர், சட்டரீதியான நடவடிக்கைகளை
மேற்கொள்ளப்போவதாக எச்சரித்ததும், உஷாரான பிரமுகர் அபகரிப்பு முயற்சியை
கைவிட்டார்.ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது புகார்: கோவை, சுந்தராபுரம், மாச்சம்பாளைச்
சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவர், கோவை மாநகர போலீஸ் மத்திய குற்றப்பிரிவில்
கடந்த ஜூலை 7ல் புகார் அளித்திருந்தார். அதில், 'எனக்குச் சொந்தமான 61
சென்ட் நிலத்தை, பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் நடத்தும் 'டவுன்ஷிப்
டெவலப்பர்' நிறுவனத்தை சேர்ந்தவர்கள் விலைபேசினர். விற்பனை செய்ய
மறுத்தபோது, எனது நிலத்தை சுற்றியிருந்த நிலங்களை விலைபேசி எனக்கு
நெருக்கடி கொடுத்து மிரட்டினர். வேறுவழியில்லாமல் மிரட்டலுக்கு பயந்து
நிலத்தை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது.
சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என,
தெரிவித்திருந்தார். தன்னை மிரட்டி நிலத்தை விலைக்கு வாங்கிய ரியல் எஸ்டேட்
நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட தி.மு.க.,
பிரமுகர் குறித்த விபரங்களையும் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின்
மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக போலீசார் ஆலோசனை நடத்தி
வருகின்றனர்.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நில அபகரிப்பு தொடர்பாக
புகார் அளிப்போர், போதிய ஆதார ஆவணங்களை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.
வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
இல்லாவிடில், குற்றம்சாட்டப்பட்டவர்கள், கோர்ட் விசாரணையின் போது
தண்டனையில் இருந்து எளிதாக தப்பிவிடுவர். புகார் மனுக்களை நாங் கள்
பெறும்போது, புகார் அளிப்பவர் யார், குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் யார்
என, ஆராய்வதில்லை. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மையாக இருந்து,
ஆதார ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்' என்றார்.