| ADDED : செப் 02, 2011 11:05 PM
பொள்ளாச்சி : காலாண்டு தேர்வு பாடத்திட்டத்தை நிறைவு செய்வதில் ஆசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால், வார விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படுகின்றன.வரும் செப்., 22ம் தேதி முதல் காலாண்டு தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான, தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்து சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு நெருங்கி வரும் நிலையில், பள்ளிகளில் ஆசிரியர்கள் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு கற்பிக்கும் பணி மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ளதால், மாணவர்களின் திறனுக்கு ஏற்ப தேர்வுக்கான பாடத்திட்டம் முழுவதும் கற்பிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களுக்கு புத்தகம் தாமதமாக வழங்கியதால், குறைவான பாடங்களை மட்டும் நடத்தி தேர்வு நடத்தும் வகையில் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கும், அவசர கதியில் பாடத்தை கற்பிக்காமல், மாணவர்களுக்கு புரியும் வகையில் பாடங்களை கற்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில், வழக்கமாக தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் காலை, மாலை நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.தற்போது பாடத்தை விரைந்து முடிக்கும் வகையில் வார விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இன்னும் 20 நாட்களுக்குள் காலாண்டு தேர்வுக்கான பாடத்திட்டம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது இவ்வாறு கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.