உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரு மாதங்களில் 133 சவரன் நகை மீட்பு தனிப்படை போலீசாருக்கு ஐ.ஜி., பாராட்டு

இரு மாதங்களில் 133 சவரன் நகை மீட்பு தனிப்படை போலீசாருக்கு ஐ.ஜி., பாராட்டு

கோவை : மேற்கு மண்டலத்தில் கடந்த இரண்டு மாதங்களில் திருட்டுப் போன 133.5 சவரன் நகையை மீட்கப்பட்டதோடு, பல்வேறு இடங்களில் நடந்த கொலை வழக்குகளில் 17 பேரை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு வெகுமதி வழங்கி, பாராட்டப்பட்டனர். மேற்கு மண்டல ஐ.ஜி., வன்னியபெருமாள் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 8 மாவட்டங்களில் திருட்டு, கொள்ளை மற்றும் கொலையாளிகளை பிடிக்க நியமிக்கப்பட்ட தனிப்படையினர், விசாரணை நடத்தி 17 பேரை கைது செய்துள்ளனர். கோமங்கலம் பகுதியில் கடந்த 8ம் தேதி முக்கால் சவரன் தங்க நகைக்காக தங்காள் என்பவர் கொலை செய்யப்பட்டார். இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தலைமையிலான போலீசார் விசாரித்து, பெரிய கல்லாரைச் சேர்ந்த பிரபு, மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர்.பெரியநாயக்கன்பாளைம் பகுதியில் நடந்த 11 கன்னக்களவு வழக்குகளில் தேடப்பட்ட மாரிமுத்து, மணிகண்டன், சிரஞ்சீவி, சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு 31 சவரன் நகை உள்பட 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து மீட்கப்பட்டது. இதே தனிப்படையினர் வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட 14 வழக்குகளில் தேடப்பட்ட கார்த்திக், வெங்கடேசன் ஆகியோரை கைது செய்து 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 54.5 சவரன் நகைகளை கைப்பற்றினர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டுகளில் நடந்த ஆறு கன்னக்களவு வழக்குகளில் தேடப்பட்ட கல்லூரி மாணவர்கள் பிரபு, சசிக்குமார், ஜெகன், பிரதீப், அருள்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 18 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லையில் நடந்த இரண்டு கொலை வழக்குகளில் தேடப்பட்ட கொலையாளிகள் மணிகண்டன், முஜிபுர்ரகுமான் கைது செய்யப்பட்டனர். நீலகிரி மாவட்டம், ஊட்டி டவுன் பகுதி லாட்ஜில் நடந்த இரட்டை கொலை வழக்கில் டி.எஸ்.பி., அசோக்குமார் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு புருசோத்தமன், பிரபு, சிவா ஆகியோரை கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் நிலுவையில் இருந்த இரு கன்னக்களவு வழக்குகளை விசாரித்த இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையிலான தனிப்படையினர் சக்திவேல், மாரியப்பன், மணிகண்டன், பன்னீர் செல்வம், தங்கராஜ், முருகேசன் ஆகியோரை கைது செய்து 40 சவரன் நகைகளை கைப்பற்றினர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனி கோட்டையில் ஆக.,18ல் நடந்த மூவர் கொலை வழக்கில் 24 மணி நேர விசாரணையின் முடிவில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். சூலகிரி கொலை வழக்கில் ஏ.டி.எஸ்.பி.,செந்தில்குமார் தலைமையிலான தனிப்படையினர் போலீசார் விசாரித்து சரவணன், கார்த்திக், குமரேசன் ஆகியோரை கைது செய்துள்ளனர் என ஐ.ஜி.,வன்னியபெருமாள் தெரிவித்தார். குற்றவாளிகளை கைது செய்து, 133 சவரன் நகை மற்றும் பணத்தை மீட்ட தனிப்படையினருக்கு மேற்கு ஐ.ஜி., வெகுமதி வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ