| ADDED : டிச 30, 2025 05:08 AM
கோவை: ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில், கோவையை சேர்ந்த ஈக்வைன் ட்ரீம்ஸ் குதிரையேற்ற பயிற்சி மைய மாணவர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர். பெங்களூருவில் நடைபெற்ற தென் மண்டலத்திற்கான இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பல மாநிலங்களில் இருந்தும் 250 குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்றனர். இந்த பயிற்சி மையம் சார்பில் 10 மாணவர்கள் பங்கேற்று 6 தங்கம்; 4 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். குறிப்பாக, ரோஹன், ஹாசினி, யஜத் சாய் மற்றும் தீப் குக்ரேதி ஆகியோர் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர். பயிற்சி மையத்தின் தலைமை செயல் அதிகாரி சக்தி பாலாஜி கூறுகையில், ''கடந்த 9 ஆண்டுகளாக எங்கள் மையத்தின் மாணவர்கள் 18 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில், 'ஷோ ஜம்பிங்' மற்றும் 'டிரஸாஜ்' ஆகிய இரண்டு பிரிவுகளிலும் மாணவர்கள் அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். குதிரையேற்றப் போட்டிகளில் சிறந்து விளங்குவதிலும், பதக்கங்களை வெல்வதிலும் தேசிய அளவில் கோவை முதல் 3 இடங்களுக்குள் உள்ளது. தொடர் பயிற்சி மற்றும் ஆர்வத்தின் காரணமாகவே மாணவர்கள் இந்த உயரத்தை எட்டியுள்ளனர்,'' என்றார்.