மேலும் செய்திகள்
துணை கமிஷனர்களுக்கு பொறுப்பு, அதிகாரம் பிரிப்பு
15-Jan-2025
கோவை; சிறுவாணியில் இருந்து வழக்கமான அளவு தண்ணீர் வழங்கக் கோரி, கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளிடம், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பேச்சு நடத்தி, அணை பராமரிப்பு நிலுவை தொகை வழங்குவதற்கான உறுதியளிப்பு கடிதம் வழங்கியுள்ளார்.கோவைக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையை பராமரிக்கும் பொறுப்பு, கேரள மாநில நீர்ப்பாசனத் துறை வசமிருக்கிறது. பராமரிப்பு தொகையை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக மாநகராட்சி வழங்குவது வழக்கம். இவ்வகையில், 13 கோடி ரூபாய் நிலுவையாக இருந்திருக்கிறது.இச்சூழலில், கோவைக்கு தண்ணீர் எடுக்கும் நீர் புகு கிணற்றில் இருந்த வால்வு பகுதியை, கேரள நீர்ப்பாசனத்துறையினர் சற்று மூடி விட்டனர். நாளொன்றுக்கு, 2.2 கோடி லிட்டர் தண்ணீர் குறைவாக வந்தது. ஒப்பந்தப்படி, நாளொன்றுக்கு, 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கலாம். அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதால், 7 கோடி லிட்டர் எடுக்கப்பட்டு வந்தது. அதிலும், முன்னறிவிப்பு ஏதுமின்றி, வால்வை மூடி, 5 கோடி லிட்டரே சப்ளை செய்ததால், மாநகராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்தது.தமிழக அரசு அதிகாரிகள் விசாரித்தபோது, பராமரிப்பு தொகை நிலுவை இருப்பது தெரியவந்தது. உடனடியாக, இரண்டு கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளிடம் குடிநீர் சப்ளை தொடர்பாகவும், பராமரிப்புத் தொகை வழங்குவது தொடர்பாகவும் பேசினார். நிலுவைத் தொகையை வழங்குவதற்கு உத்தரவாதம் அளித்து கடிதம் வழங்க, கேரள அதிகாரிகள் கோரினர். அதனடிப்படையில், நிலுவை தொகை வழங்க உறுதியளித்து, மாநகராட்சி சார்பாக கமிஷனர் கடிதம் கொடுத்திருக்கிறார். இனி, 7 கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
15-Jan-2025