கோவை;கோவை மாநகராட்சியில் பொது நிதி, குடிநீர் வடிகால் நிதி மற்றும் ஆரம்ப கல்வி நிதி என மூன்று தலைப்புகளின் கீழ் கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு ரூ.3,000 கோடிக்கு வரவு - செலவு மேற்கொள்ளப்படுகிறது.2023-24 நிதியாண்டில், மொத்த வரவு ரூ.3,018.90 கோடி; மொத்த செலவு ரூ.3,029.07 கோடி எனவும், நிகர பற்றாக்குறை ரூ.10.17 கோடி ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.வழக்கமாக, மார்ச் இறுதியில் பட்ஜெட் கூட்டம் நடத்தப்படும். நடப்பாண்டு மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு இருப்பதால், முன்னதாக, பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆயத்த கூட்டம், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்தது. கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தார். துணை கமிஷனர்கள் செல்வசுரபி, சிவக்குமார் முன்னிலை வகித்தனர். துறை தலைவர்கள் மற்றும் உதவி கமிஷனர்கள், கணக்கு பிரிவினர் பங்கேற்றனர்.கடந்த நிதியாண்டில் அறிவித்த திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 'ஸ்மார்ட் சிட்டி' நிதியில், அறிவு சார் மையம், சீர்மிகு நகர அனுபவ மையம் திறக்கப்பட்டுள்ளன.பில்லுார் மூன்றாவது திட்டம் விரைவில் துவங்கும் நிலையில் இருக்கிறது. நமக்கு நாமே திட்டத்தில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன. குப்பை மேலாண்மைக்கு தொட்டிகள் வாங்கப்பட்டிருக்கின்றன. ரோடு போடும் பணிகள் நடந்து வருகின்றன.மத்திய அரசு நிதியில், நல்வாழ்வு மையங்கள் கட்டப்பட்டுள்ளன. இன்னும் டாக்டர்கள் நியமிக்காததால், செயல்பாட்டுக்கு வராமல் இருக்கின்றன.ராஜ வீதி, பெரிய கடை வீதியில் மோட்டார் அல்லாத வாகன போக்குவரத்து மற்றும் நடைபாதை உருவாக்கும் திட்டம் இன்னும் முழுமையாக முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.இவை தவிர, இன்னும் துவங்கப்படாமல் உள்ள திட்டங்கள் எவை; அதற்கான காரணங்கள் கோரப்பட்டன.புதிதாக என்னென்ன திட்டங்களை செயல்படுத்தலாம்; வரும் நிதியாண்டுக்கு துறை வாரியாக எவ்வளவு தொகை ஒதுக்க வேண்டும் என, துறை வாரியாக அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
மாநகராட்சி கமிஷனர் கேட்கணும்
கடந்தாண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்த சில திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கின்றன.அவற்றின் விபரம்:* உக்கடம் குளத்தில் ரூ.1.20 கோடியில் மிதவை சூரிய சக்தி மின் கலன் அமைக்கும் திட்டம்.* மக்கும் குப்பையில் 'பயோ காஸ்' உற்பத்தி, உலர் கழிவு மீட்பு மையம், உலர் மற்றும் ஈரக்கழிவுகளை இயந்திரம் மூலம் எரியூட்டி, பேவர் பிளாக் கற்கள் உருவாக்குதல், பிளாஸ்டிக் கலவையுடன் ரோடு போடுவதற்காக பிளாஸ்டிக் அரவை இயந்திரம் தருவித்தல்.* உள்ளூர் திட்ட குழும நிதியில், நான்கு இணைப்பு சாலைகள் உருவாக்குதல்.* வ.உ.சி., பூங்கா வளாகத்தில் ராமானுஜம் கணிதப் பூங்கா உருவாக்குதல், குமாரசாமி குளத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைத்தல் போன்ற திட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, இன்னும் செயல்படுத்தப்படவில்லை.