| ADDED : நவ 28, 2025 03:29 AM
- நமது நிருபர் - இந்த ஆண்டு கொப்பரை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்தது. சில மாதங்களுக்கு முன் அதிகபட்சமாக கிலோ, 260 ரூபாய்க்கு விலை போனது. தேங்காய் அதிகபட்சமாக, 40 ரூபாய் வரை விற்பனையாகி சரித்திரம் படைத்தது. அதன் பின் விலை படிப்படியாக சரியத் துவங்கியது. தற்போது ஒரு கிலோ கொப்பரை, 200 ரூபாய்க்கும் கீழ் சென்றுள்ளது. வியாபாரிகள் தேங்காய் விலையை பெருமளவு குறைத்து கேட்பதால் விவசாயிகளும் விற்பனை செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். மழைக்காலம் என்பதால் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. தேங்காயை கொப்பரையாக மாற்ற, 15 நாட்கள் வரை ஆகிறது. அதற்குள் விலை சரிந்து விட்டால் நஷ்டம் ஏற்படும். இதன் காரணமாக கொப்பரை உலர்கள உரிமையாளர்கள் தேங்காய் கொள்முதல் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். தேங்காய் வரத்து குறைந்தது, விலை தொடர் சரிவை சந்திப்பது, விவசாயிகள் குறைந்த விலைக்கு தேங்காய் விற்பனை செய்ய தயங்குவது போன்ற காரணங்களால் தீபாவளிக்குப்பின் உலர் களங்கள் முழு வீச்சில் இயங்க முடியாமல் தத்தளித்து வருகின்றன.