கோவை:ஐகோர்ட் உத்தரவை மீறி, கோவையில் விளம்பர பலகைகள் வைக்கும் பணி மீண்டும் துவங்கியிருக்கிறது. இதில், கருமத்தம்பட்டியில் மூன்று பேர் உயிரிழந்த இடத்துக்கு சற்றுத்துாரத்தில், மீண்டும் விளம்பர பலகைகள் வைத்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே, கடந்தாண்டு ஜூன் மாதம் அனுமதியின்றி விளம்பர பலகை வைத்தபோது, இரும்பு சாரம் சரிந்து, சம்பவ இடத்திலேயே மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.அதைத்தொடர்ந்து, கலெக்டர் கிராந்திகுமார் அதிரடி உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் அனுமதியற்ற விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. இரும்பு சட்டங்களை சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனத்தினரே அகற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், சில இடங்களில் நகரமைப்பு பிரிவினர் அகற்றினர்; பல இடங்களில் அகற்றவில்லை. ரயில்வேக்கு சொந்தமான இடத்தில், விளம்பர பலகை வைத்திருப்பது தொடர்பான வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.அதில், முறையாக அனுமதி பெற்று, நிபந்தனைக்கு உட்பட்டு, விளம்பர பலகை வைக்க அனுமதி அளிக்க அறிவுறுத்தப்பட்டது.ஆனால், தமிழக அரசின் புதிய சட்டத்துக்கு மாறாக, விதிமுறையை மீறி, விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.அவை அனைத்தும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் உள்ளன. அவற்றை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அகற்றாமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.இவ்விஷயத்தில், ஆரம்பத்தில் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், சமீபகாலமாக மவுனம் சாதிக்கிறார். இதன் மர்மம் அவருக்கு மட்டும்தான் தெரியும்.இதேபோல், சின்னியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரு இடங்களில், அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. கருமத்தம்பட்டி நகராட்சி பகுதியில், மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த இடத்துக்கு சற்றுத்துாரத்தில், கோவையில் இருந்து அவிநாசி செல்லும் பிரதான சாலையின் இருபுறமும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் மெகா சைஸில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.மீண்டும் விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படும் முன், அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்ற, மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.