கோவை:மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதையும், இறப்புகளை தவிர்க்கவும் மாநகராட்சி அறிமுகம் செய்த 'டோல்பிரீ எண்', பல மாதங்களாக செயல்படாதது, விதிமீறல்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.கோவை மாநகராட்சி பகுதி குடியிருப்புகளில், 'செப்டிக் டேங்க்' கழிவுகளை அகற்றும் தனியார் கழிவுநீர் அகற்றும் லாரிகள், உக்கடம், ஒண்டிப்புதுாரில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணைகளில் கொட்ட வேண்டும் என்பது விதிமுறை.இதற்கென, மாநகராட்சி வசம் உரிமம் பெற வேண்டும். சில தனியார் வாகனங்கள் ஆட்கள் நடமாட்டமற்ற பொது வெளியிலும், கால்வாய், குளம் உள்ளிட்ட நீர் நிலைகளிலும் கொட்டுவது தொடர்கதையாக உள்ளது. இவ்விதிமீறலால் பொது மக்களுக்கும், சுகாதாரத்துக்கும் தீங்கு ஏற்படுகிறது.விதிமீறும் வாகனங்களை, பொது மக்கள் சிறைபிடிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. தற்போது, கழிவுநீர் அகற்ற நவீன 'ஏர் செப்டிக்' வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இருந்தும், மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் அவலங்களும் நடக்கின்றன.இதில் விஷவாயு தாக்கி உயிரிழப்புகளும் நடக்கின்றன. இதுபோன்ற விதிமீறல்களை தடுக்க, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள தகவல் மையத்தில் கடந்தாண்டு பிப்., மாதம் 0422 14420 என்ற 'டோல் பிரீ' எண் சேவை அறிமுகம் செய்யப்பட்டது.துாய்மை பாரதம் திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, இந்த எண்ணில் வீடுகளில் செப்டிக் டேங்க் நிறைதல், ரோடுகளில் அடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை, பொது மக்கள் தெரிவித்து வந்தனர். உடனடியாக, தனியார், மாநகராட்சி கழிவு அகற்றும் வாகனங்கள் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.கண்ட இடங்களில் கொட்டப்படும், விதிமீறல் புகார்களும் தெரிவிக்க ஏதுவாக இருந்தது. இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, இந்த டோல்பிரீ எண் செயல்படாததால், சேவை கிடைக்காதது மட்டுமின்றி, விதிமீறல்களுக்கும் வழிவகுப்பதாக பொது மக்கள் புலம்புகின்றனர். இதன் உச்சகட்ட விளைவாக, ஏழை துாய்மை பணியாளர்களின் உயிரிழப்பு, மீண்டும் தொடர்கிறது.
சேவை மீண்டும் தேவை!
பி.என்.புதுார் பகுதி மக்கள் கூறுகையில், 'மாநகராட்சியின் 'டோல்பிரீ எண்' சேவை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கடந்த சில மாதங்களாக இந்த எண்ணை தொடர்புகொள்ள முடிவதில்லை. கால்வாய் உள்ளிட்ட நீர் நிலைகளில், கழிவுநீரை வெளியேற்றும் விதிமீறல்கள் தொடர்பான புகாரை யாரிடம் அளிப்பது என தெரியவில்லை. இச்சேவை மீண்டும் கிடைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.