| ADDED : ஜன 04, 2024 12:17 AM
கோவை : பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி, ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில், நேற்று துவங்கியது. ராமலிங்கம் செட்டியார் பள்ளி சார்பில், 27ம் ஆண்டு 'ராமலிங்கம் செட்டியார் நினைவு கோப்பைக்கான' மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான போட்டி நேற்று துவங்கியது. போட்டியை, டி.ஏ., ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளியின் செயலாளர் அங்கப்பன், தலைமை ஆசிரியர் ராதாமணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.இப்போட்டியில், 16 பள்ளி அணிகள் பங்கேற்றுள்ளன. நாக் அவுட் முறையில் நடக்கும் இத்தொடரின் முதல் போட்டியில், இப்பள்ளியும் செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராமலிங்கம் செட்டியார் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. அணியின் கருப்பசாமி (50) அரை சதம் அடித்தார். அடுத்து விளையாடிய செயின்ட் தாமஸ் பள்ளி அணி, 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.இதன் மூலம், ராமலிங்கம் செட்டியார் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. செயின்ட் தாமஸ் அணிக்கு ரோஷன் அலி (44), ஸ்ரீனேஷ் (40) ஆகியோர் பொறுப்பாக விளையாடினர்.