| ADDED : ஜன 29, 2024 12:33 AM
கோவை;ஆய்வக முடிவுகள் தாமதமாக வழங்கப்படுவதால், சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக, நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும், பல ஆயிரம் நோயாளிகள் வருகின்றனர். இவர்களின் நோய் தன்மைக்கு ஏற்ப, பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், சிகிச்சை மேற்கொள்ளப்படும். இதற்காக மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பரிசோதனைக்ககூடம் செயல்படுகிறது.மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் உள்நோயாளிகள் தவிர, புறநோயாளிகளுக்கும் இங்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் எப்போதும், அங்கு கூட்டம் அதிகம் இருந்து வருகிறது.இந்நிலையில், சமீபகாலமாக பரிசோதனை முடிவுகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக, நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.இதனால், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''அனைத்து பரிசோதனைகளும் விரைந்து அளிக்கப்படுகின்றன. இதற்காக ஆய்வகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சில பரிசோதனைகளுக்கு, கால அவகாசம் தேவை.வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் பரிசோதனை முடிவுகள் அதிகபட்சம், மூன்று மணி நேரத்துக்குள் வழங்கப்பட்டு விடும். ஆனால், வைரல் பாதிப்பு எந்தளவுக்கு உள்ளது என்பதை கண்டறிய, சில நாட்கள் பிடிக்கும்.ஏனெனில், இத்தகைய பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் விலை உயர்ந்தவை. இவற்றை ஒரு சில பரிசோதனைகளுக்காக மட்டும் பயன்படுத்த முடியாது. இத்தகைய பரிசோதனைகளை குறிப்பிட்ட காலம் வரை மேற்கொள்ள வேண்டும். அதனால், முடிவுகள் வழங்க சில நாட்கள் பிடிக்கும். இதை நோயாளிகள் தவறாக எடுத்துக் கொள்கின்றனர்,'' என்றார்.