| ADDED : ஜன 30, 2024 12:00 AM
பேரூர்:ஜாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின், மாதாந்திர செயற்குழு, ஆறுமுககவுண்டனூரில் நடந்தது.இக்கூட்டத்திற்கு, சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். 'பிப்.,6ம் தேதி, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள் குரு பூஜையை, வையம்பாளையத்தில் உள்ள மணிமண்டபத்தில் சிறப்பாக நடத்த வேண்டும், பால் விலையை மூன்று ரூபாய் உயர்த்தி கொடுத்துவிட்டு, ஆவின் நிறுவனம் பால் உற்பத்திக்கான கால்நடை கலப்பு தீவனத்தின் விலையை மூட்டை ஒன்றுக்கு 200 ரூபாய் உயர்த்தி, விற்பனை செய்து வருகிறது.இதனால், விவசாயிகளிடையே பால் உற்பத்தி விலையை உயர்த்தி கொடுத்தும் பயனில்லை என்ற ஆதங்கம் நிலவுகிறது. எனவே, கால்நடை தீவன விலை உயர்வை கைவிட வேண்டும்.வனத்தை ஒட்டியுள்ள விவசாயம் செய்ய இயலாத பட்டா நிலங்களில் உள்ள, சீமை கருவேல் புதர்களினால், வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன. எனவே, வனத்தை ஒட்டியுள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட, ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் ரங்கநாதன், மாநில பொருளாளர் சண்முகம் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.