| ADDED : ஜன 10, 2024 10:20 PM
வால்பாறை : வால்பாறை அரசு கல்லுாரியில், தேசிய பேரிடர் மீட்புப்பணிக்குழுவினர் செயல்விளக்கம் காண்பித்தனர்.வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியில், சென்னை, அரக்கோணம் தேசிய மீட்புப்பணிக்குழுவினர் இயற்கை சீற்றத்தின் போது, பாதுகாப்பாக நடந்து கொள்வது எப்படி என, செயல்விளக்கம் காண்பித்தனர்.கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கமாண்டர்கள் பட்டேல் விஜய்சிங், சுனில்குமார் ஆகியோர் பேசியதாவது:சென்னையில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையில், 16 வீரர்கள் வீதம், நான்கு படைகள் உள்ளன. பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில் இந்த அமைப்பு செயல்படுகிறது. இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, அந்தமான், நிகோபார் உள்ளிட்ட மாநிலங்களில் சமீப காலமாக இயற்கை சீற்றத்தால் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இது போன்ற இயற்கை சீற்றத்தின் போது, பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்டு பணிகளை மேற்கொள்கின்றனர். சமீபத்தில், சென்னை, துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் கனமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.இவ்வாறு, பேசினர்.தொடர்ந்து, இயற்கை சீற்றத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து மாணவர்கள் மத்தியில் செயல்விளக்கம் காண்பித்தனர்.