கோவை;'தினமலர்' நாளிதழ் மாணவர்கள் பதிப்பான பட்டம் இதழ் சார்பில் நடந்த, 'பதில் சொல் அமெரிக்கா செல்' என்ற மெகா வினாடி-வினா போட்டியில் மாணவர்கள் அசத்தலாக பதில் அளித்தனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி பள்ளி மாணவர்கள் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான, ' நாசா' வுக்கு நேரில் செல்லும் வாய்ப்பை வழங்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் சார்பில், மெகா வினாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி, இந்துஸ்தான் கல்வி குழுமத்துடன் இணைந்து , கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த, 150 பள்ளிகளில் நடக்கிறது. இப்போட்டிகளை, கோலோ நிறுவனம் மற்றும் சத்யா ஏஜென்சி இணைந்து வழங்குகிறது. சி.எஸ்.அகாடமி
கோவைப்புதுார் பகுதியில் அமைந்துள்ள, சி.எஸ்.அகாடமியில் தகுதி சுற்றுக்கான பொது அறிவு போட்டியில், 150 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு செய்யப்பட்ட, 16 பேர் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். கால் இறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி மூன்று பிரிவுகளாக நடந்தது. இதில், 'எப்' அணியை சேர்ந்த, ஒன்பதாம் வகுப்பு மாணவன் தர்சன் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவன் சர்வேஷ்வரன் ஆகியோர், அதிக புள்ளிகளுடன் அரை இறுதிபோட்டிக்கு முன்னேறினர். வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் நீல் குஹா மற்றும் ஆசிரியர்கள் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி, பாராட்டு தெரிவித்தனர். கீதாஞ்சலி பப்ளிக் பள்ளி
கொடிசியா வளாகம் அருகில் அமைந்துள்ள, கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியில், தகுதி சுற்றுக்கான பொது அறிவு தேர்வு போட்டியில், 31 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில், சிறப்பாக எழுதிய 16 மாணவர்கள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். கால் இறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி மூன்று பிரிவுகளாக நடந்தது. இதில், ' ஏ' அணியை சேர்ந்த பிளஸ்1 மாணவி கரிஷ்மா ஸ்ரீ, எட்டாம் வகுப்பு மாணவன் ரிதன் ஆகியோர், அதிக புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பள்ளி முதல்வர் கவிதா வழங்கி வாழ்த்தினார்.