உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானைகள் பசிக்கு 600 வாழைகள் சேதம்

யானைகள் பசிக்கு 600 வாழைகள் சேதம்

மேட்டுப்பாளையம் :சிறுமுகை அருகே யானைகள் பசிக்கு 500க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1.50 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிறுமுகை லிங்காபுரம் அடுத்த காந்தவயலில் துரைசாமி என்பவர் 2,000 நேந்திரம் வாழை பயிர் செய்துள்ளார். இவை அனைத்தும் குலை விட்டு ஒரு மாதத்தில் அறுவடை செய்யும் நிலைக்கு வளர்ந்துள்ளன. கடந்த 23ம் தேதி இரவு இத்தோட்டத்தில் நான்கு யானைகள் புகுந்து 300க்கும் மேற்பட்ட வாழை மரங்களை உடைத்து சேதம் செய்துள்ளன. இதே போன்று லிங்காபுரத்தில் ராமையன், செந்தில் ஆகியோர் தோட்டத்தில் யானைகள் புகுந்து தலா 100 வாழைகளுக்கு மேல் அழித்துள்ளன. காந்தவயலில் ராணி தோட்டத்தில் 100 வாழைகளையும் யானைகள் சேதம் செய்துள்ளன. மொத்தமாக நான்கு இடங்களில் 600க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன; இதனால் விவசாயிகளுக்கு 1.50 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயி சிறுமுகை துரைசாமி கூறுகையில், ''காந்தவயல், லிங்காபுரம் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் லட்சக்கணக்கான வாழைகள் பயிர் செய்துள்ளனர். யானைகளிடமிருந்து வாழைகளை பாதுகாக்க வனத்துறை நிர்வாகம், அகழி எடுத்துள்ளது. ஆனால், ஒரு இடத்தில் பாறையாக இருந்ததால், அங்கு அகழி எடுக்கவில்லை. அதன் வழியாக யானைகள் கூட்டம் கூட்டமாக தோட்டத்தில் புகுந்து வாழைகளை சேதம் செய்து வருகின்றன. கடந்த 4 மாதங்களாக இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இல்லாமல் இருந்தன; தற்போது, அதிகளவில் இருப்பதால், வாழைகளுக்கும், இரவு காவலில் ஈடுபட்டுள்ள மனிதர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ