உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காருண்யா பல்கலை - கனடா பல்கலை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

காருண்யா பல்கலை - கனடா பல்கலை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை :கோவை, காருண்யா நிகர்நிலை பல்கலை மற்றும் கனடா, லேத்பிரிஜ் பல்கலை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, அவிநாசி ரோடு ரெசிடென்சி ஓட்டலில் நேற்று நடந்தது. இளநிலை மேலாண்மை பட்ட படிப்புக்காக இருபல்கலைகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. காருண்யா பல்கலை துணைவேந்தர் பால்அப்பாசாமி, பதிவாளர் ஆனிமேரி மற்றும் கனடா,லேத்பிரிஜ் பல்கலை மேலாண்மைதுறை டீன் ராபர்ட் எல்லிஸ் உள்ளிட்டேர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். காருண்யா பல்கலை பதிவாளர் ஆனிமேரி பேசுகையில்,''நான்கு ஆண்டுகள் கொண்ட மேலாண்மை பட்ட படிப்புக்காக கையெழுத்திடப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இரண்டு ஆண்டுகள் மாணவ, மாணவியர் இந்தியாவிலும், அடுத்த இரண்டு ஆண்டுகள் கனடாவிலும் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவில் படிக்கும்போது அங்கு வேலைபார்த்து கொண்டே படிக்கும் வாய்ப்பும் உள்ளது. இதன் மூலம் மாணவ, மாணவியர் படிப்புக்காக செலவிடும் தொகையில் ஒரு பகுதியை தாங்களே சம்பாதிக்க முடியும். பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவியர் இப்படிப்பில் சேரலாம்,' என்றார். கனடா, லேத்பிரிஜ் பல்கலை மேலாண்மைத்துறை டீன் ராபர்ட் எல்லிஸ் பேசுகையில், ''இந்தியா- கனடா நாடுகளுக்கிடையேயான உறவு மேம்பட இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும். தற்போது, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவ, மாணவியர் கனடாவில் உயர்கல்வி கற்கின்றனர்; ஆண்டுதோறும் 40 சதவீத வளர்ச்சி காணப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் கனடாவில் மாணவ, மாணவியர் தங்கி படிக்கும்போது, அங்கு பணியாற்றவும் வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறோம். இதன் மூலம் படிக்கும் காலத்தில் மாணவ, மாணவியர் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது,'' என்றார். மேலாண்மை பட்டப்படிப்பு குறித்த விபரங்களை, காருண்யா பல்கலையில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ