உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 9,279 ஏக்கர் நிலம் அபகரிப்பு; போலீசார் மலைப்பு :எங்கே போய் முடியும்? இதுவரை ரூ. 1,000 கோடி!

9,279 ஏக்கர் நிலம் அபகரிப்பு; போலீசார் மலைப்பு :எங்கே போய் முடியும்? இதுவரை ரூ. 1,000 கோடி!

கோவை : கோவை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய, மேற்கு மண்டலத்தில் மட்டும் 913 கோடி ரூபாய் மதிப்பிலான 9,279 ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக 4,249 பேர் போலீசில் புகார் அளித்துள்ளனர். தினமும் புகார்கள் குவிந்தவண்ணம் இருப்பதால், இன்னும் 15 நாட்களில், அபகரிக்கப்பட்ட நிலத்தின் மொத்த மதிப்பு 1,000 கோடியை எட்டிவிடும் என்கின்றனர், போலீஸ் அதிகாரிகள். தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த நில அபகரிப்புகள் தொடர்பான புகார்களை, மாநகர மற்றும் மாவட்ட போலீஸ் தோறும் ஏற்படுத்தப்பட்டுள்ள 'நில அபகரிப்புக்கு எதிரான விசாரணைப்பிரிவு' விசாரிக்கிறது; இதுவரை, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் போலீசில் குவிந்துள்ளன. மேற்கு மண்டலத்தில் கோவை மாவட்டத்தில் 303, ஈரோட்டில் 666, நீலகிரியில் 84, திருப்பூரில் 397, சேலத்தில் 748, நாமக்கல்லில் 920, தர்மபுரியில் 549 மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 582 புகார்கள் என, மொத்தம் 4,249 புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த புகார்களின் மீது விசாரணை நடத்திய போலீசார், ஆவணங்களின் அடிப்படையில் முதற்கட்டமாக 150 வழக்குகளை பதிவு செய்து, மாஜி எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க., பிரமுகர்கள் உள்ளிட்ட 120 பேரை கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் கோவை, கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ரத்தினம் என்பவர் அளித்த நில அபகரிப்பு தொடர்பான புகாரின் பேரில், கோவை மாநகர தி.மு.க.,செயலாளர் வீரகோபால்(43), ராஜவீதி, சொர்ணம் மஹாலைச் சேர்ந்த சாந்தலிங்கம்(65) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதே போலீஸ் ஸ்டேஷனில் லோகநாதன் என்பவர் அளித்த நில அபகரிப்பு புகாரைத் தொடர்ந்து சாந்தலிங்கம், ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்த, பவானி தி.மு.க., இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் ராமலிங்கம்(52) ஆகியோர் மீது வழக்குப்பதிவாகியுள்ளது. ரூ.1,000 கோடியை எட்டுகிறது: நில அபகரிப்பு தொடர்பாக, மேற்கு மண்டல போலீசில் கடந்த மே 15 முதல் நேற்று முன் தினம் வரை 4,249 பேர் புகார் அளித்துள்ளனர். இவர்கள் பறிகொடுத்ததாக கூறப்படும் மொத்த நிலத்தின் பரப்பு 9,279 ஏக்கர்; நில அபகரிப்பில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை 811 பேர். இவர்களால் அபகரிக்கப்பட்ட நிலங்களின் தற்போதைய மார்க்கெட் மதிப்பு மொத்தம் 913 கோடியே 54 லட்சத்து 68 ஆயிரத்து 591 ரூபாய் என போலீசார் மதிப்பிட்டுள்ளனர். அபகரிக்கப்பட்ட நிலங்களில், போலீசாரின் அதிரடி நடவடிக்கை மூலமாக 166.43 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மிகக்குறுகிய காலத்தில் சுமார் 1,000 கோடிக்கு நிகரான நிலங்களை அரசியல்வாதிகளும், ரியல் எஸ்டேட் மாபியாக்களும் திட்டமிட்டு அப்பாவிகளிடம் அபகரித்துள்ளனர். போலி ஆவணம் தயாரித்தும், அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கை காட்டி மிரட்டியும் நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை வந்துள்ள புகார்களை விசாரித்து முடிக்கவே இன்னும் பல மாதங்களாகும். தொடர்ந்து மேலும்,மேலும் புகார் வந்து கொண்டே இருப்பதால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. இந்நிலை நீடித்தால், மாவட்டத்துக்கு ஒரு நில அபகரிப்புக்கு எதிரான விசாரணைப் பிரிவு போதாது; போலீஸ் சப்-டிவிஷன் தோறும் தலா ஒரு விசாரணைப்பிரிவு தேவைப்படும். நில அபகரிப்பு தொடர்பான புகாரை பெற்றதும் நாங்கள் உடனடியாக வழக்குப்பதிவு செய்வதில்லை. முதலில், சி.எஸ்.ஆர்., (கம்யூனிட்டி சர்வீஸ் ரிஜிஸ்ட்ரர்) ரசீது வழங்குகிறோம். நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் ஆதார ஆவணங்களை புகார்தாரர் சமர்ப்பித்ததும் அவற்றை தீவிரமாக ஆராய்ந்து, சட்ட வல்லுனருக்கு அனுப்பி, 'வழக்குப்பதிவு செய்ய உகந்ததா' என, அறிவுரை கேட்கிறோம். 'உகந்தது' என சட்ட வல்லுனர் ஒப்புதல் அளித்ததும், அடுத்த கட்டமாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரணையை துவக்கி, குற்றவாளிகளை கைது செய்கிறோம். இவ்வாறு, அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.மாவட்டம் வாரியாக 'நில அபகரிப்பு' மதிப்பு: கோவை - ரூ. 146 கோடி ஈரோடு - ரூ.97 கோடி நீலகிரி - ரூ.19 கோடி திருப்பூர் - ரூ.249 கோடி சேலம் - ரூ. 86 கோடி நாமக்கல் - ரூ.190 கோடி தர்மபுரி - ரூ.40 கோடிகிருஷ்ணகிரி - 85 கோடி அரசியல்வாதிகள் 70 பேர் அரசியல் சாராதவர்கள் 168 பேர் நில அபகரிப்பு தொடர்பான புகார்களின் மீது போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டுள்ளனர். இதுவரை போலீசுக்கு வந்துள்ள புகார்களின் மீதான ஆரம்பகட்ட விசாரணையில், நில அபகரிப்பில் தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க.,வினர் 70 பேருக்கும், அரசியல் சாராத 168 பேருக்கும் (ரியல் எஸ்டேட் அதிபர்கள் உள்பட) தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நபர்களின் பட்டியலை தயாரித்துள்ள போலீசார், மிக ரகசியமாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்து அதிரடி கைது நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகின்றனர். வழக்கு விசாரணையின்போது, 'சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எவ்விதத்திலும் தகவல் சென்றுவிடக் கூடாது' என்பதில் போலீசார் உஷராக உள்ளனர். நம்பிக்கைக்குரிய போலீசாரை மட்டுமே, கைது நடவடிக்கையில் ஈடுபடுத்தி வருகின்றனர்.கே.விஜயகுமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ