உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊர் பேர்தான் வெள்ளலூர்; ஒரு மாதமாக வரவில்லை குடிநீர்!

ஊர் பேர்தான் வெள்ளலூர்; ஒரு மாதமாக வரவில்லை குடிநீர்!

குறிச்சி : வெள்ளலூர் அருகே, 20 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வராததால், ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெள்ளலூர் பேரூராட்சி முதல் வார்டிலுள்ள சக்தி ஈஸ்வர் நகர், ஓம் சக்தி நகர் மற்றும் கக்கன் நகரில், 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிப்போருக்கு, சக்தி ஈஸ்வர் நகரிலுள்ள 'சின்டெக்ஸ்' டேங்க் ஒன்றிலிருந்து, மோட்டார் பொருத்தப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன் மோட்டார் பழுதானது; புதிய மோட்டார் பொருத்தாமல், பழுதான மோட்டாரை சீராக்கி பொருத்தினர், பேரூராட்சி நிர்வாகத்தினர். அந்த மோட்டார் மீண்டும் பழுதானது. அதனால், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வரவில்லை. அரை கி.மீ.,க்கு அப்பாலுள்ள கோன வாய்க்கால்பாளையம் பகுதிக்கு சென்று பொது மக்கள் தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. பல முறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், நேற்று காலை 9.30 மணிக்கு வெள்ளலூர் - போத்தனூர் ரோட்டில், மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சமாதானம் செய்தனர்.புதிய மோட்டார் பொருத்தி, குடிநீர் வினியோகத்தை சீராக்க வேண்டும் என, மக்கள் கோரினர். அங்கு வந்த வார்டு கவுன்சிலர் தமிழரசி உடனடியாக மாற்று மோட்டார் பொருத்த ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்; சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியலால், ஒரு மணி நேரத்துக்கும் மேல், இவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேட்பாரில்லை!: குடிநீருக்காக மக்கள் மறியல் செய்த அதே பகுதியில், பிரதான குடிநீர் குழாய் ஒன்று செல்கிறது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேல், இக்குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. பேரூராட்சி தலைவர், கவுன்சிலர், செயல் அலுவலர் ஆகியோரிடம் பொதுமக்கள், பலமுறை புகார் தெரிவித்தும் பயனில்லை. பள்ளிக்கு செல்லும் 2 சிறுவர்கள், கடந்த 10 நாட்களுக்கு முன், இக்குழியில் விழுந்து காயமடைந்தனர். ஆனால், இன்று வரையிலும் அந்த குழியும், ஒழுகும் குழாயும் மூடப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ