உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேராசை பெருநஷ்டம்: 2 ஆயிரம் பேரிடம் 2 கோடி ரூபாய் சுருட்டல்!

பேராசை பெருநஷ்டம்: 2 ஆயிரம் பேரிடம் 2 கோடி ரூபாய் சுருட்டல்!

அன்னூர் : அதிரடி விளம்பரம் செய்து, 2 ஆயிரம் பேரிடம் 2 கோடி ரூபாயை சுருட்டிய மோசடி நிறுவனம், திடீரென மூடுவிழா கண்டது; பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்து விட்டு கண்ணீரோடு காத்திருக்கின்றனர். குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் எதிர்பார்க்கும் நபர்களை குறி வைத்து பல நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளன. 'வெப்சைட்' துவக்கி வாடிக்கையாளர்களுக்கு வலை விரிக்கின்றன. முதலீட்டு பணத்துக்கு அதிக வட்டி தருவதாக ஆசை காட்டுகின்றன. சென்னை, திருவான்மியூரில் இயங்கி வரும் ஒரு தனியார் நிறுவனம், 'சர்வதேச அளவில் ஓட்டல், நிதி, இரும்பு, கம்ப்யூட்டர் மென்பொருள் மற்றும் டெக்ஸ்டைல் தொழில் செய்வதால், எங்களிடம் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக' விளம்பரம் செய்தது.'ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், வருமான வரி பிடித்தம் போக, மாதம் 8 ஆயிரத்து 500 வீதம், 36 மாதங்களில் 3 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இத்துடன் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்ட 30 ஆயிரத்தையும், வருமான வரி அலுவலகத்தில் விண்ணப்பித்து, திரும்ப பெற்றுக் கொள்ளலாம்' என்றும் அதிரடியாக அறிவித்தது அந்த நிறுவனம். இரு ஆண்டுக்கு முன்பு வரை சிலர் மட்டுமே இத்திட்டத்தில் முதலீடு செய்தனர். சேர்ந்த பலருக்கு மாதம் தவறாமல் வங்கி சேமிப்பு கணக்கில் பணம் சேர்ந்தது. அதன்பின், 'இத்திட்டத்தில் இருவரை சேர்த்து விட்டால், அதற்கும் தனியாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், 2,400 சதுரடி நிலம் வழங்கப்படும்' என்றும் அந்த நிறுவனம் அறிவித்தது. இதில் கவரப்பட்ட அன்னூர், சிறுமுகை, மேட்டுப்பாளையம், புளியம்பட்டி, அவிநாசியை சேர்ந்த 2,000 க்கும் மேற்பட்டவர்கள், இத்திட்டத்தில் பணம் செலுத்தியதுடன், பலரையும் சேர்த்தும் விட்டனர். இப்போது இவர்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் சிலர் கூறியதாவது: அந்நிறுவனம் முதலீட்டை ரொக்கமாக வாங்கவில்லை. கம்பெனி அக்கவுண்டில் வங்கியில் செலுத்தினோம். வாடிக்கையாளர்களுக்கும் ரொக்கமாக வழங்காமல், வங்கி மூலம் எங்களுடைய சேமிப்பு கணக்குக்கு பணம் அனுப்புவதாக கூறினர். வருமான வரி நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) இல்லாதவர்கள் இதில் சேர முடியாது என்றும் தெரிவித்திருந்தனர். 'பான் கார்டு' இல்லாதவர்களுக்கு நிறுவன பிரதிநிதிகளே 15 நாட்களில் வாங்கி கொடுத்தனர். இதனால் நம்பிக்கை ஏற்பட்டு பலரையும் இத்திட்டத்தில் சேர்த்துவிட்டோம். கோவை புறநகர் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் புளியம்பட்டி, சத்தி, கோபியைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் 2 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதத்திலிருந்து வட்டி வரவில்லை. விசாரித்தபோது வருமான வரி கணக்கு காண்பிக்க உள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திலிருந்து பணம் வரும் என்று கூறினர். ஜூன் மாதம் ஆகியும் வரவில்லை. சென்னையில் கம்பெனிக்கு சென்று பார்த்தபோது, கம்பெனி மூடப்பட்டிருந்தது.நிறுவனத்தின் தொலைபேசி மற்றும் மொபைல் எண்களில் தொடர்பு கொண்டால் பதிலில்லை. இந்த நிறுவனத்தில் விவசாயிகள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் உள்பட பலரும் தங்களது மொத்த சேமிப்பை செலுத்தியுள்ளனர்.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளோம். இத்திட்டத்தில் முதலில் சேர்ந்த சிலர் அசலுக்கு மேல் வட்டி வாங்கி விட்டனர். அந்த நிறுவனத்தின் சொத்துக்களை அரசு கையகப்படுத்தி, முதலீடு செய்தவர்களுக்கு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். தேசிய வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சில ஆயிரம் ரூபாய் செலவழித்தால், சிறிய நிறுவனத்தையும், கம்பெனிகள் சட்டத்தின்கீழ் பதிவு செய்து கொள்ளலாம். அந்த பதிவுச்சான்றை அப்பாவி மக்களிடம் காண்பித்து,' அரசு பதிவு பெற்ற நிறுவனம். செலுத்தும் தொகைக்கு அரசு உத்தரவாதம் உள்ளது' என்று கூறி வசூலில் ஈடுபடுகின்றனர். ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று டெபாசிட் வசூலித்தால் மட்டும் உச்சவரம்புடன் கூடிய 'கியாரண்டி' உள்ளது. ஆனால், கம்பெனிகள் சட்டத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் செய்யப்படும் முதலீடுக்கு அரசு அல்லது ரிசர்வ் வங்கி கியாரண்டி கிடையாது. வங்கிகள் அதிகபட்சமாக ஆண்டுக்கு 10.5 சதவீதம் வட்டி வழங்குகின்றன. தனியார் நிறுவனம் ஆண்டுக்கு 40 சதவீதம் வட்டி தருவதாக வாக்குறுதி அளிப்பதை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம். அதிக வட்டி தரும் நிறுவனங்கள் நிலைத்து நிற்காது. மக்கள் முதலீடு செய்யும் முன் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார். இதேபோல, 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் கம்ப்யூட்டர் பணி வழங்குவதுடன், ஆட்களைச் சேர்த்து விடுவதற்குத் தனிப்பணம் என்று சில நிறுவனங்கள் கிளம்பியுள்ளன. இவற்றைத் தடுக்கவும், மோசடி நிறுவனங்களைக் கண்டறியவும் காவல்துறை நடவடிக்கை எடுப்பது அவசியம்; ஆனால், உழைக்காமலே, குறுக்கு வழியில் குறுகிய காலத்தில் சம்பாதிக்க வேண்டுமென்ற மக்களின் மனோபாவம் மாறாதவரையிலும், இத்தகைய மோசடிகளை யாராலும் தடுக்கவே முடியாது என்பதே நிஜம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை