உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மறுசீரமைக்கப்பட்ட வார்டுகளில் ஓட்டு சேகரிக்க கவுன்சிலர்கள் ஆர்வம்

மறுசீரமைக்கப்பட்ட வார்டுகளில் ஓட்டு சேகரிக்க கவுன்சிலர்கள் ஆர்வம்

பொள்ளாச்சி : ஊராட்சியில், பல உறுப்பினர்களின் வார்டுகள் பறிபோகியுள்ளதால், மறுசீரமைக்கப்பட்ட வார்டுகளிலுள்ள புதிய வாக்காளர்களிடம் ஓட்டு சேகரிக்கும் பணியில் கவுன்சிலர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில், கடந்த உள்ளாட்சி தேர்தல் வரை ஊராட்சிகளில் ஒரு வார்டுக்கு பல உறுப்பினர்கள் என்ற முறை இருந்தது. தற்போதைய தேர்தலில் இந்த முறையை மாற்றி, ஒரு வார்டுக்கு ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளில், மறுசீரமைப்பு செய்த போது, பல ஊராட்சிகளில் வார்டுகளின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில், பல வார்டுகளில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், ஊராட்சிகளில் கூடுதலாக மூன்று முதல் ஐந்து வார்டுகள் வரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. பேரூராட்சிகளின் வார்டுகளை மறுசீரமைக்கும் போதும், இதே போன்ற பிரச்னை ஏற்பட்டது. இதற்கு, கவுன்சிலர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் அக்., மாதம் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில், போட்டியிட ஒவ்வொரு கட்சி சார்பில் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. ஊராட்சிகளில், தற்போதுள்ள கவுன்சிலர்களாக இருக்கும் பலரும் அந்தந்த கட்சியில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். மனு தாக்கல் செய்த கையோடு, ஊராட்சிகளில் மறுசீரமைக்கப்பட்ட வார்டுகளிலுள்ள புதிய வாக்காளர்களிடம் ஓட்டு சேகரிக்கும் பணியில் கவுன்சிலர்கள் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான ஊராட்சிகளில், புதிய வாக்காளர்களை நேரடியாக சந்தித்து கவுன்சிலர்கள் ஓட்டு சேகரித்து வருகின்றனர். ஊராட்சிகளில், மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள், நிறைவேற்றப்படாமல் இருக்கும் பணிகள், மக்களின் தேவை என அனைத்து விபரங்களையும் சேகரித்து வருகின்றனர். ஒரு சில ஊராட்சிகளில், திண்ணை பிரசாரமும் சூடுபிடித்துள்ளது. ஊராட்சிகளில், தலைவர் பதவிக்கு போட்டியிடவும் பலர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே கிராமப்புறங்களில் தேர்தல் திருவிழா சூடுப்பிடிக்க துவங்கியுள்ளது. ஒன்றிய அலுவலகங்களில் வளர்ச்சி பணிகளை துரிதப்படுவதிலும், தேர்தல் ஆயத்த பணிகளை நிறைவு செய்வதிலும் அதிகாரிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்தாண்டு வரை 'டெண்டர்' விட்டு நிறைவு செய்யாமல் இருக்கும் அனைத்து வளர்ச்சி பணிகளையும் உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என, ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ