பொள்ளாச்சி : கோவை மாவட்டத்தில், அரசின் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின்
கீழ் நடப்பாண்டில் 2,881 பயனாளிகளுக்கு 11 ஆயிரத்து 524 ஆடுகள்
வழங்கப்படவுள்ளன. தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நிலமற்ற, ஏழை
குடும்பங்களுக்கு இலவச ஆடுகள், மாடு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 2,881 பயனாளிகளுக்கு ஆடுகள்
வழங்கப்படவுள்ளன.முதல்கட்டமாக, கோவை மாவட்டத்தில் எஸ்.எஸ்., குளம்
ஒன்றியத்திற்குட்பட்ட அத்திபாளையம் ஊராட்சியில் 27 பயனாளிகளுக்கும், வடக்கு
ஒன்றியத்திற்குட்பட்ட 26 பயனாளிகளுக்கும் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, அடுத்த கட்டமாக ஆடுகள் வழங்க கிராமங்கள் தேர்வு செய்யும் பணி
தீவிரமாக நடக்கிறது. கோவை மாவட்டத்தில், நடப்பாண்டில் 2,881 பயனாளிகளுக்கு
தலா நான்கு ஆடுகள் வீதம் 11 ஆயிரத்து 524 ஆடுகள் வழங்கப்படவுள்ளன. கோவை
கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் சிவபிரகாசம் கூறியதாவது: தமிழக
அரசின் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டம் தேர்வு
செய்யப்பட்டுள்ளது. இதில், நடப்பாண்டில் 11 ஆயிரத்து 500 ஆடுகள்
வழங்கப்படவுள்ளன. முதல்கட்டமாக, 53 பயனாளிகளுக்கு 212 ஆடுகள்
வழங்கப்பட்டுள்ளன. ஆடு பெற்ற பயனாளிகளுக்கு, ஆடுகளை பராமரிப்பு, வளர்ப்பது
குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர்கள் சார்பில்
வாரம் ஒருமுறை பரிசோதனையும் செய்யப்படும். மருத்துவ பரிசோதனை செய்யும்
போது, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அட்டையில் குறிக்கப்படும்.
அடுத்தகட்டமாக, மாவட்ட முழுவதுமுள்ள ஒன்றியங்களில் பயனாளிகள் தேர்வு செய்ய
திட்டமிடப்பட்டுள்ளது. இதில், எந்த ஒன்றியத்தில் முதலில் ஆடுகள் வழங்குவது
என்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து, அரசு அறிவித்த பின் முடிவு
செய்யப்படும்.கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, ஆடுகள் வாங்குவதற்காக சந்தை அமைந்துள்ளதால்
பயனாளிகள் சிரமமின்றி ஆடுகளை தேர்வு செய்ய முடியும். உள்ளாட்சி தேர்தல்
அறிவிக்கப்படவுள்ளதால், தேர்தலுக்கு பின் ஆடுகள் வழங்கும் திட்டம்
துவங்கும் வாய்ப்புள்ளது, என்றார். இதற்கிடையில், ஒவ்வொரு ஊராட்சியிலும்
வறுமை கோட்டிற்கு கீழுள்ள பெண்களின் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக
நடக்கிறது.