உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகராட்சி இடம் ஆக்கிரமிப்பு "லிஸ்ட் ரெடி

நகராட்சி இடம் ஆக்கிரமிப்பு "லிஸ்ட் ரெடி

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் உள்ள நிரந்தர ஆக்கிரமிப்புகள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து, ஆக்கிரமிப்பு லிஸ்ட் தயாரித்துள்ளனர். உள்ளாட்சி தேர்தல் வரவுள்ள நிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பொள்ளாச்சி நகராட்சியில் கோவை ரோடு, உடுமலை ரோடு, பாலக்காடு ரோடு, கடைவீதி, மார்க்கெட் ரோடு, காந்தி வாரச்சந்தை, பழைய இரும்பு மார்க்கெட் பகுதிகளில் அரசியல் கட்சிகளின் துணையோடு ஆக்கிரமிப்புகள் புற்றீசல் போன்று ஏற்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கவுன்சிலர்கள், நகராட்சி கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதையடுத்து, ஆக்கிரமிப்பு அகற்றும் கமிட்டி அமைக்க நகராட்சி கவுன்சிலில் முடிவு செய்யப்பட்டது. நகராட்சி கமிஷனர், பொறியாளர் மற்றும் நகரமைப்பு அலுவலர்கள் கொண்ட ஆக்கிரமிப்பு அகற்றும் கமிட்டி அமைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தின் அளவு, ஆக்கிரமிப்பாளர்கள் பெயர் போன்ற விபரங்களுடன் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பட்டியலை தயாரித்துள்ளனர். நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் கடை அமைத்துள்ளவர்கள் அரசியல் பின்பலத்துடன் இருப்பதும், தி.மு.க., அ.தி.மு.க., கட்சியை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற இடையூறாக இருப்பதும் அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் வரவுள்ள நிலையில், நகராட்சி நிலத்தில் ஏற்பட்டுள்ள ஆக்கரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முன்வருவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பொள்ளாச்சி நகராட்சியில் பழைய இரும்பு மார்க்கெட்டில் அதிகளவில் ஆக்கிரமிப்பு கடைகள் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று நகரப்பகுதியில் ரோடு இடத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பாளர்கள் லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. சப்-கலெக்டர் அனுமதி பெற்று, போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்படும். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்து விட்டால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தொய்வு ஏற்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை