உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாடகைத் தாய் பிரச்னையில் போலீஸ் தலையீடு :பெண்ணின் வக்கீல் குற்றச்சாட்டு

வாடகைத் தாய் பிரச்னையில் போலீஸ் தலையீடு :பெண்ணின் வக்கீல் குற்றச்சாட்டு

கோவை : ''கோவையில் விஸ்வரூபம் எடுத்து வரும் 'வாடகைத்தாய்' பிரச்னையில் மருத்துவ மையத்துக்கு ஆதரவாக உயர் போலீஸ் அதிகாரிகளின் தலையீடு தேவையற்றது'' என, பெண்ணின் வக்கீல் தெரிவித்துள்ளார்.திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் சிவகுமார்(40); தனியார் கல்லூரி காவலாளியாக சூலூரில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ராஜலட்சுமி(34), இங்குள்ள அட்டைப் பெட்டி தயாரிக்கும் கம்பெனியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்தார். கடந்த ஆண்டு பத்திரிகையில் வெளிவந்த 'வாடகைத் தாய்' தேவை என்ற விளம்பரத்தை பார்த்த ராஜலட்சுமி, கோவை - ஆவராம்பாளையம் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்துக்கு விண்ணப்பித்தார். இவரை சந்தித்த பெண் டாக்டர் ஒருவர், ராஜலட்சுமிக்கு உடல் பரிசோதனை நடத்தி, 'வாடகைத் தாயாக' ஒப்பந்தம் செய்தார். இதன்பின், குறிப்பிட்ட தம்பதிகளுக்காக ராஜலட்சுமியின் கர்ப்பப் பையில் கரு முட்டை சேர்ப்பு நடந்தது. வாடகைத் தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்காக மாதம் 12 ஆயிரம் ரூபாய் தருவதாகவும், மூன்று வேளையும் சத்தான உணவு வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், உறுதி அளித்தபடி மருத்துவமனையில் உணவும், ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை. ஊட்டச்சத்து மருந்தும், மாத்திரையும் தரப்படவில்லை. இதனால் வாடகைத் தாயின் கால்கள் வீக்கம் கண்டன. இதுபற்றி கேட்டபோது, வாடகைத் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பெற்றோர், ஒப்பந்தம் செய்தபடி மருத்துவ மனைக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்ந்ததால் அச்சமடைந்த ராஜலட்சுமி தன்னை வீட்டுக்கு அனுப்பும்படி தகராறு செய்ததால், கர்ப்பிணி நள்ளிரவு 12.30 மணிக்கு வெளியேற்றப்பட்டார். சூலூர் சென்ற ராஜலட்சுமிக்கு கடந்த 11ல் குழந்தை பிறந்தது. இதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் ராஜலட்சுமியிடம் ஏற்கனவே வெற்றுத்தாளில் பெறப்பட்டிருந்த கையெழுத்தைக் காட்டி, போலீஸ் துணையுடன் மிரட்டப்பட்டார். பயந்து போன தம்பதியினர், சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு, குழந்தையுடன் சென்று விட்டனர்.தற்போது, கருத்தரித்தல் மையம் சார்பில் ரேஸ்கோர்ஸ் போலீசில் தரப்பட்ட புகாரில், வாடகைத் தாயாக ஒப்பந்தம் செய்யப்பட்டபோது ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒப்புக்கொண்டதாகவும், தற்போது, அப்பெண் 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது. போலீசாரும் வழக்குப்பதிவு செய்து இதுபற்றி விசாரிக்கின்றனர். இதுபற்றி கோவை வக்கீல் விஜயராகவன் கூறியது: இப்புகாரில் பாதிக்கப்பட்ட பெண்ணை வாடகைத் தாயாக ஒப்பந்தம் செய்தபோது, சில வெற்றுத்தாள்களில் கையெழுத்து பெற்றுள்ளனர். இடையில், குழந்தையின் பெற்றோர் பணத்தை தராததால், வாடகைத் தாய்க்கு உணவு, மருந்து, ஊட்டச்சத்து வழங்காமல் புறக்கணித்துள்ளனர். இதற்கு பயந்தே அப்பெண் மருத்துவமனையில் இருந்தே வெளியேறி உள்ளார். தற்போது அழகான குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தையை கேட்டு மருத்துவ 6மையம் போலீஸ் உதவியுடன் மிரட்டுகிறது. உயர் போலீஸ் அதிகாரிகளும் அப்பெண்ணிடம் மிரட்டல் தொனியில் பேசியுள்ளனர். தற்போதும் கூட, உண்மையான பெற்றோர் வந்து கேட்டால், அவர்கள் தரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு குழந்தையைத் தர தயாராக இருப்பதாக வாடகைத் தாயும், அவரது கணவரும் தெரிவித்துள்ளனர், என வக்கீல் விஜயராகவன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ