அன்னுார்:இலவச வேட்டி சேலை கிடைக்காமல், பல்லாயிரம் பேர் இரண்டாவது நாளாக நேற்றும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.அன்னுார் தாலுகாவில், 87 ரேஷன் கடைகள் உள்ளன. 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், ஆயிரம் ரூபாய் ரொக்கம், பச்சரிசி ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ, முழு நீள கரும்பு வழங்கப்படும் என அறிவித்தது.கடந்த 10ம் தேதி முதல், ரேஷன் கடை வாரியாக பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. கடந்த 12ம் தேதி மற்றும் 13ம் தேதி பொங்கல் பரிசு பெற டோக்கன் பெற்றவர்கள், ரேஷன் கடைக்கு சென்றபோது வேட்டி, சேலை தீர்ந்து விட்டது; இனி வந்த பிறகு தான் தர முடியும் என்று கூறி ஊழியர்கள் திருப்பி அனுப்பி விட்டனர். ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டும் வழங்கியுள்ளனர்.இதனால், அன்னுார் தாலுகாவில், பல்லாயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஏமாற்றத்துடன் ரேஷன் கடைக்கு வந்து திரும்பிச் சென்றனர்.அதிகாரிகள் கூறுகையில், 'அன்னுார் தாலுகாவில், 63 ஆயிரத்து 273 ரேஷன் கார்டுதாரர்களில், 60 ஆயிரத்து 276 பேருக்கு, தலா ஆயிரம் ரூபாய், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கப்பட்டு விட்டது. வேட்டி, சேலை கிடைக்காதவர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பின் வழங்கப்படும்' என்றனர்.