கோவை;கோவை லோக்சபா தொகுதியில், லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற, மூன்றாண்டு சாதனைகளை பட்டியலிட்டு, வீடு வீடாகச் சென்று திண்ணை பிரசாரத்தில் ஈடுபட, கோவை தி.மு.க.,வினருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.லோக்சபா தேர்தலில் போட்டியிட, தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதி பங்கீடு பேச்சு நடந்து வருகிறது. கோவை தொகுதியில், 1996ல் தி.மு.க., நேரடியாக போட்டியிட்டு, வெற்றி பெற்றது. அதன்பின் நடந்த தேர்தல்களில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி விட்டுக் கொடுக்கப்பட்டது. நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிட, தி.மு.க.,வினர் விரும்புகின்றனர். அதனால், தேர்தல் பணியில் முனைப்பு காட்டி வருகின்றனர். ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும், 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏழு பூத்களுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர்களிடம் பூத் வாரியாக வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டு இருக்கிறது.லோக்சபா தேர்தல் பணியை துவக்க, கட்சி தலைமை அறிவுறுத்தியதை தொடர்ந்து, கோவை தெற்கு, வடக்கு மற்றும் சிங்காநல்லுார் சட்டசபை தொகுதிகளுக்கான பூத் கமிட்டி உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகளுக்கான கூட்டம், நேற்று மூன்று இடங்களில் நடத்தப்பட்டது. சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளரும், சிங்காநல்லுார் தொகுதி தேர்தல் பார்வையாளருமான மணிசுந்தர், முன்னாள் அமைச்சர் பொங்கலுார் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர். அதில், 'மூன்றாண்டுகளாக தி.மு.க., ஆட்சியில் செய்த சாதனைகளை, மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டும். இதற்காக 26 (திங்கள்) முதல், ஒவ்வொரு பகுதியிலும் வீடு வீடாகச் சென்று திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டதாக, கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் தெரிவித்தார்.