| ADDED : டிச 01, 2025 04:57 AM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளில், உள்ளாட்சி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், உள்ளாட்சி நிர்வாகத்தினர் சுகாதாரத் துறையுடன் இணைந்து, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பருவமழை பெய்து வருவதால், இருமல், சளி, காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. மேலும், வீடுகளின் முன் குவித்து வைக்கப்பட்டுள்ள தட்டுமுட்டு சாமான்களில் மழை நீர் தேங்கி, டெங்கு கொசுக்கள் உருவாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, உள்ளாட்சி நிர்வாகங்கள், சுகாதார துறையினருடன் இணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. உள்ளாட்சி அலுவலர்கள் கூறுகையில், 'காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களை, சுகாதாரத் துறையினருடன் இணைந்து, கூடுதல் கவனம் செலுத்தி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். வீடுகளை சுற்றியும் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பழைய டயர் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்தவும், மேல்நிலை தொட்டிகளை மூடி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகில் உள்ள சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 'காய்ச்சல் பாதிப்பு இருந்தால், அரசு மருத்துவமனையிலோ அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலோ சிகிச்சை பெற வேண்டும். தன்னிச்சையாக மருந்து கடைகளில் மருந்து வாங்கி பயன்படுத்தக் கூடாது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றனர்' என்றனர்.