கோவை:துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வியாபார நிறுவனங்கள் அதிகம் உள்ள இடங்களில், இரு குப்பை தொட்டிகள் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.கோவை மாநகராட்சி பகுதிகளில், துாய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.குறிப்பாக, குப்பை மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வியாபார நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில், 'டிவின் பின் சிஸ்டம்' நிறுவப்படவுள்ளது.அதாவது, ஐந்து மண்டலங்களிலும் வியபார நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் நடைபாதையை பயன்படுத்துவோர், குப்பையை ரோட்டில் கொட்டாமல் இருக்க மக்கும், மக்காத குப்பை கொட்ட ஏதுவாக என, இரண்டு குப்பை பெட்டிகள் கொண்ட, கட்டமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.மாநகராட்சி சுகாதார பிரிவினர் கூறுகையில், 'நடைபாதையில் செல்வோர் பயன்படுத்தும் விதமாக, சிறிய அளவிலான கழிவுகளை சேர்க்கும், மக்கும் மற்றும் மக்காத குப்பை என இரண்டு குப்பை தொட்டிகள் நிறுவப்படவுள்ளன.இரண்டு தொட்டிகள் வீதம், 75 தொட்டிகள் வைக்கப்படவுள்ளன. அதன் படி, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, டவுன்ஹால் பஸ் ஸ்டாப், 100 அடி ரோடு, ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி, சுந்தராபுரம், திருச்சி பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில், இப்பெட்டிகள் வைக்கப்படவுள்ளன' என்றனர்.