கோவை : கோவை 'டியூகாஸ்' நிறுவனத்தில், போலி பஞ்ச காவ்யம் விற்பனை செய்வதாக, விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கலெக்டர் கிராந்திகுமார், உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் காளிச்சாமி பேசியதாவது:ரசாயன உரத்துக்கு மாற்றாக பஞ்ச காவ்யம், மண் புழு உரம், வேப்பம் புண்ணாக்கு உள்ளிட்ட இயற்கை வழி வேளாண் இடுபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அரை லிட்டர் பஞ்ச காவ்யம், 84 ரூபாய் என கூறி, 'டியூகாஸ்' நிறுவனம் விற்பனை செய்கிறது. வேளாண் பல்கலையில் ஒரு லிட்டர் பஞ்ச காவ்யம் ரூ.80, தனியார் நிறுவனம் ஒன்றில் ரூ.90க்கு விற்கப்படுகிறது. 'டியூகாஸ்' நிறுவனம் விற்பனை செய்வது, தரமற்ற, போலியான பஞ்சகாவ்யம். இதேபோல், போலியான மண் புழு உரம் விற்பனை செய்யப்படுகிறது. வேளாண் இடுபொருட்கள் தாய்ப்பாலுக்கு நிகரானது. இதுதொடர்பாக ஆய்வு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.'டியூகாஸ்' நிறுவனத்தில் சூரிய உலர்த்தி, பேட்டரி ஆட்டோ, அலுவலக கட்டடங்கள் பராமரிக்க ரூ.50 லட்சம் மானியம் அரசு வழங்கியுள்ளது. இந்நிதியில் முறைகேடு நடந்திருக்கிறது; விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.இவரது குற்றச்சாட்டை, விவசாயிகள் பலரும் ஆமோதித்தனர். அப்போது, பஞ்ச காவ்யம் என கூறி விற்கப்படும் டப்பாவை, டி.ஆர்.ஓ.,விடம் விவசாயிகள் கொடுத்தனர். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து, தரத்தை உறுதிப்படுத்த அறிவுறுத்தினார்.'டியூகாஸ்' நிறுவனம் விற்பனை செய்வது, தரமற்ற, போலியான பஞ்சகாவ்யம். இதேபோல், போலியான மண் புழு உரம் விற்பனை செய்யப்படுகிறது. வேளாண் இடுபொருட்கள் தாய்ப்பாலுக்கு நிகரானது. இதுதொடர்பாக ஆய்வு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'ஆய்வுக்குப் பின் தடை'
போலி பஞ்ச காவ்யம் குறித்து, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன் பதிலளிக்கையில், ''டியூகாஸ் விற்கும் பஞ்ச காவ்யம் தரமற்றதா, போலியானதா என வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து கூறியதும், விற்பனை உடனடியாக தடை செய்யப்படும்,'' என்றார்.
சங்கனுார் பள்ளம் சுருங்குகிறது
விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டுவிவசாயி காளிச்சாமி கூறுகையில், ''சங்கனுார் பள்ளத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள மட்டுமே, மாநகராட்சிக்கு பொதுப்பணித்துறை அனுமதி அளித்திருக்கிறது. முந்தைய காலகட்டங்களில், சங்கனுார் பள்ளத்தில் காட்டாறு போல் வெள்ளம் சென்றிருக்கிறது. இதற்கு முன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், பலரும் உயிரிழந்திருக்கின்றனர். தற்போது வாய்க்கால் பள்ளத்தை, மாநகராட்சி அதிகாரிகள் சுருக்கி வருகின்றனர். வெள்ளம் வந்தால், பாதிப்பு அதிகமாகி விடும். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, சங்கனுார் பள்ளம் பராமரிக்கும் பொறுப்பை, மீண்டும் பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்க வேண்டும்,'' என்றார்.