கோவை: கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனரின் கோரிக்கையின் பேரில், மகளிர் இ- -ஆட்டோ வாங்குவதற்கான கடன் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், விவசாயக் கடன், சிறு வணிகக் கடன், கல்வி கடன், நகை கடன் என, பல பிரிவுகளில் கடன் வழங்கப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆயிரம் மகளிருக்கு, சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், மின்சாரத்தில் இயங்கும் 'இ--ஆட்டோ' வாங்க, கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக, தலா, மூன்று லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வாகனத்தின் சாலை விலையில், 10 சதவீதம் தொகையை வாங்குபவர் விளிம்பு தொகையாக செலுத்த வேண்டும் என்பது, அதில் ஒரு விதிமுறை. தற்போது பெரும்பாலான ஆட்டோக்களின் சாலை விலை, ரூ.4.50 லட்சம் முதல் 5.20 லட்சம் வரை உள்ளது. மூன்று லட்சம் ரூபாய் கடனுதவி என தெரிவித்த நிலையில், 10 சதவீத விளிம்பு தொகை செலுத்தும் பட்சத்தில், கூடுதல் தொகை செலுத்தி ஆட்டோ வாங்க வேண்டும் என்ற சூழல் உருவானது. இதனால், தமிழக அரசின் திட்ட இலக்கு, பயனாளிகளுக்கு சேராமல் போய் விடும் என கருதி, சென்னையில் சமீபத்தில் நடந்த கூட்டுறவு மேலாண்மை இயக்குனர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்ற, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் வலியுறுத்தினர். இதையடுத்து, ரூ.3 லட்சம் என இருந்த கடனுதவி ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதனால், இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.