| ADDED : ஜன 09, 2024 07:58 PM
வால்பாறை;வால்பாறையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக யானைகள் வீடுகளை இடித்து சேதப்படுத்தி வருவதால், தொழிலாளர்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில், பருவமழைக்கு பின் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் தேயிலை காட்டிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் யானைகள் முகாமிட்டுள்ளதால், தொழிலாளர்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ளது அக்காமலை எஸ்டேட் இரண்டாவது டிவிஷனில், கடந்த மூன்று நாட்களாக யானைகள் முகாமிட்டு, இரவு நேரத்தில் தொழிலாளர்களின் வீடுகளை இடித்து சேதப்படுத்தி வருகின்றன.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு எஸ்டேட் மேலாளர் பெருமாள் கிருஷ்ணன் என்பவரது வீட்டின் முன் பகுதியில், கதவு, ஜன்னல், கார் கண்ணாடி ஆகியவற்றை யானைகள் சேதப்படுத்தின.இந்த சம்பவத்தில் எஸ்டேட் மேலாளர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகள் தொடர்ந்து அக்காமலை எஸ்டேட் பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால், தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.இதேபோல், சோலையாறு எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட மற்றொரு யானைகள் கூட்டம், அங்கு பயிரிடப்பட்ட வாழை, பலா, கொய்யா போன்றவைகளை உட்கொண்டன. தொழிலாளர்களின் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட பெருமாள் என்பவரின் ஸ்கூட்டியை, யானைகள் சேதப்படுத்தின. தொழிலாளர்கள் திரண்டு சென்று யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால், இரவு நேரத்தில் எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் பதற்றமான சூழலே நிலவுகிறது.