சுற்றுச்சூழல் விழிப்புணர்வு; பள்ளிகளில் மரக்கன்று நடும் விழா
கோவை; சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட கணபதி மாநகர், பாரதி நகர் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.விழாவின் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியரின் அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.காலை, 10:15 மணிக்கு விழா துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்பகுதியிலுள்ள மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் காலை, 7:30 மணிக்கே வரவழைக்கப்பட்டு இருக்கையில் அமரவைக்கப்பட்டிருந்தனர். விருந்தினர்கள் வருகை தாமதத்தால், மதியம், 12:30 மணிக்கு மேல் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது.மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், 'குழந்தைகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது நல்ல விஷயம்தான். அதேசமயம், இப்படி காத்திருக்க வைக்கக்கூடாது. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்' என்றனர்.