மேட்டுப்பாளையம் : தமிழக அரசு இரண்டு மாதமாக ஊக்கத்தொகை வழங்காததால், பால் உற்பத்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் தனியார் நிறுவனத்திற்கு பால் வழங்க, பால் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, ஆவின் நிறுவனத்தின் சார்பில், விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து, பாலை கொள்முதல் செய்யப்படுகிறது. தினமும், பல லட்சம் லிட்டர் பாலை, ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்து, அதை பதப்படுத்தி, மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. பாலில் உள்ள கொழுப்பின் அளவை வைத்து, ஆவின் நிறுவனம் ஒரு லிட்டருக்கு, 28 லிருந்து, 36 ரூபாய் வரை விலை கொடுக்கிறது.இந்நிலையில் கொள்முதல் செய்யும் பாலுக்கு, விலை உயர்வு வழங்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு, கொள்முதல் விலையை உயர்த்தாமல், லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்தது. கடந்த ஐந்து மாதங்களாக, தமிழக அரசு ஊக்கத்தொகையை வழங்கி வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக ஊக்கத்தொகை வழங்காமல் அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் பாலுக்கு விலையுடன், லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி வந்தது.இதைப் பார்த்து தனியார் நிறுவனத்தில் பால் ஊற்றி வந்த விவசாயிகள், ஆவின் நிறுவன பால் கொள்முதல் நிலையத்தில் பாலை ஊற்றி வருகின்றனர்.இதனால் ஒவ்வொரு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திலும், 100 லிருந்து 200 லிட்டர் பால் கூடுதலாக கிடைத்து வந்தது. இந்நிலையில் கடந்த ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதத்திற்கான ஊக்கத் தொகையை, அரசு இன்னும் வழங்காமல் உள்ளது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ஊக்கத்தொகை குறித்து, அரசும், ஆவின் நிறுவனமும், எவ்வித அறிவிப்பும் வெளியிடாததால் மீண்டும் தனியார் பால் கொள்முதல் நிலையத்திற்கு, பாலை ஊற்ற விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். எனவே உடனடியாக ஊக்கத் தொகையை வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.