பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலருக்கு முதல் பரிசு
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டத்தில், சிறந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலராக தேர்வு பெற்ற, முத்துக்கல்லூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலர் பிரபாகருக்கு, முதல் பரிசுத் தொகையும், சான்றிதழும், மாவட்ட கலெக்டர் வழங்கினார்.காரமடை அடுத்த வெள்ளியங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்கல்லூரில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்தில், 90 உறுப்பினர்கள் உள்ளனர். சங்கத்திலிருந்து தினமும் காலை, மாலை இரண்டு நேரம் சேர்த்து மொத்தமாக, 1,200 லிட்டர் பால் கொள்முதல் செய்து, ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது.இந்த கூட்டுறவு சங்கத்தின் செயலராக பிரபாகர் பணியாற்றி வருகிறார்.கோவை மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில், சிறப்பாக செயல்படும் முதல் மூன்று கூட்டுறவு சங்க செயலர்களை தேர்வு செய்து, மாவட்ட நிர்வாகம் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் முத்துக்கல்லூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலர் பிரபாகர் முதல் பரிசுக்கு தேர்வு பெற்றார். அவருக்கு, மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், பரிசுத் தொகை பத்தாயிரம் ரூபாயும், சான்றிதழும் வழங்கி பாராட்டினார்.