உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேலோ இந்தியா விளையாட்டு; வாகன விழிப்புணர்வு பிரசாரம்

கேலோ இந்தியா விளையாட்டு; வாகன விழிப்புணர்வு பிரசாரம்

கோவை;தமிழகத்தில் நடைபெறும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான வாகன பிரசாரம் மற்றும் டார்ச் கொண்டுசெல்லும் நிகழ்ச்சியை, கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் பொள்ளாச்சி எம்.பி., சண்முக சுந்தரம் நேற்று துவக்கி வைத்தனர். மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் 2018ம் ஆண்டு முதல் நடக்கின்றன. இந்தாண்டு, தமிழகத்தில் ஜன.,19ம் தேதி முதல் 31ம் தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் நடக்கவுள்ளது. 27 வகையான விளையாட்டு போட்டிகளுடன் சிலம்பத்தை, டெமோ விளையாட்டாகவும் சேர்த்து நடத்தப்படுகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக கூடைப்பந்து மற்றும் 'தங் டா' ஆகிய போட்டிகள் கோவையில் நடக்கிறது. இதற்கு கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோவை பிரிவு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் வாகன பிரசாரம் மற்றும் டார்ச் கொண்டு செல்லும் விழிப்புணர்வு நிகழ்வு, கோவையில் நேற்று துவங்கப்பட்டது.கலெக்டர் அலுவலகத்தில் இருந்து இரண்டு வாகனங்கள் புறப்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதேபோல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டன.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த கேலோ இந்தியா டார்ச் அறிமுக நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன.பரிசுகளை, கலெக்டர் கிராந்தி குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா, பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், கோவை மாவட்ட பாரா விளையாட்டு சங்க தலைவர் சர்மிளா ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து, டார்ச் பிரசார வாகனங்கள் கோவையில் இருந்து திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை