உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேலோ இந்தியா விளையாட்டு போஸ்டரில் பிரதமர் படம் மாயம்: பா.ஜ., மகளிரணி  தேசிய தலைவர் கண்டனம்

கேலோ இந்தியா விளையாட்டு போஸ்டரில் பிரதமர் படம் மாயம்: பா.ஜ., மகளிரணி  தேசிய தலைவர் கண்டனம்

கோவை:''மத்திய அரசின் நிதியுதவி வாயிலாக நடத்தப்படும், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான விளம்பர போஸ்டர்களில் வேண்டுமென்றே, பிரதமர் மோடியின் படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது,'' என பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:கேலோ இந்தியா விளையாட்டு போட்டி, மத்திய அரசு நிதியுதவியுடன் நாடு முழுவதும் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதி விளையாட்டுக்கள் மட்டுமே தமிழகத்தில் நடக்கின்றன.இதற்கான விளம்பர போஸ்டர்களில் முன்னாள் முதல்வர், தற்போதைய முதல்வர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. நம் பிரதமரின் படம் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வினர், போஸ்டர்களில் கூட குடும்ப அரசியல் செய்கின்றனர்.மாநில அரசின் இத்தகைய செயல்பாடு கண்டனத்திற்கு உரியது. இதற்கு முன், செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும், இதுபோன்றே நடந்துகொண்டனர்.போஸ்டர்களில், பிரதமர் மோடியின் படத்தை மாநில அரசு உடனடியாக சேர்க்க வேண்டும். புறக்கணித்தால், எங்கள் கட்சி சார்பில் போஸ்டர்களில் படங்களை ஒட்டுவோம்.திருமாவளவன், 'நாங்கள் இந்துக்கள் இல்லை' என்று சொன்னால், அரசியல் அமைப்பு சட்டத்தின் படி இடஒதுக்கீடு, அவர் பேசும் மக்களுக்கு உரிமைகள் இல்லாமல் போகும். இதை புரிந்துகொண்டுதான் பேசுகிறாரா என்பது தெரியவில்லை. சாதி ரீதியான பாகுபாட்டிற்கு, பா.ஜ., ஒரு போதும் ஆதரவு தருவதில்லை; தீண்டாமைக்கு முழு மூச்சாக எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்கமாக செயல்படுகின்றோம்.ஒரு சில சக்திகளால், திசைமாற்றம் செய்யும் நிகழ்வுகளை, இவர்கள் ஊக்குவிப்பதால், நம் நாடு தற்போது பயங்கரமான, மதமாற்ற சக்திகளிடம் பிடிபட்டு உள்ளது.இவ்வாறு, வானதி கூறினார்.நடிகர் விஜய் கட்சி ஆரம்பிப்பது குறித்த கேள்விக்கு, ''யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்; கட்சி ஆரம்பித்து எவ்வாறு செயல்படுகின்றனர், மக்களின் ஆதரவு எவ்வாறு உள்ளது என்பதை பார்ப்போம்.அதன் பின்னரே கருத்து தெரிவிக்க இயலும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை