| ADDED : டிச 26, 2025 06:30 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், குப்பை உள்ளிட்ட கழிவுகளில் பயன்படுத்தப்பட்ட கண்ணாடிகள் வீசப்பட்டுள்ளன. இவற்றை உணவோடு சேர்த்து சாப்பிடும் கால்நடைகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பொள்ளாச்சி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் கால்நடை வளர்ப்போர், மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்காக ரோட்டோரத்தில் விடுகின்றனர். அவை புற்களை உண்பதுடன், குப்பை குவிக்கப்பட்டிருக்கும் இடங்களில் உணவு கிடைக்கும் என சுற்றித்திரிகின்றன. ஒரு சில இடங்களில், ஆடு, மாடுகள், குப்பை கழிவில் குவிக்கப்பட்டிருக்கும் அழுகிய காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை உட்கொள்கின்றன. சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ரோட்டோரம் குப்பையோடு குப்பையாக கிடக்கும் கழிவுகளை கால்நடைகள் உட்கொள்ளும் போது, பாலித்தீன் கழிவுகளையும் உட்கொள்கின்றன. உணவுக்குழாயில் பாலித்தீன் கழிவுகள் அடைத்துக் கொண்டால், கால்நடைகள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. மேலும், பயன்படுத்தப்பட்ட டியூப் லைட், கண்ணாடிகளை குப்பையில் வீசியுள்ளனர். இவற்றை, உணவோடு உட்கொள்ளும் கால்நடைகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும். குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும்; ரோட்டோரங்களில் வீசக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துதல், குப்பையை திறந்தவெளியில் வீசுவதை தவிர்ப்பதில்லை. மேலும், கால்நடை வளர்ப்போரும் மேய்ச்சலுக்கு விடுவதுடன் சென்று விடுகின்றனர். அவை, உட்கொள்ளும் உணவுகளை கவனிப்பதில்லை.பொதுமக்கள் கண்ணாடி, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவை திறந்தவெளியில் வீசாமல் தரம் பிரித்து வழங்க வேண்டும்.கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும் போது, கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு, கூறினர்.