உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பஸ் ஓட்டும்போது ஹெட்செட் கூடாது அரசு பஸ் டிரைவர்களுக்கு அறிவுறுத்தல்

 பஸ் ஓட்டும்போது ஹெட்செட் கூடாது அரசு பஸ் டிரைவர்களுக்கு அறிவுறுத்தல்

மேட்டுப்பாளையம்: செல்போன், ஹெட்செட், ப்ளூ டூத் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என மேட்டுப்பாளையம் கிளை அரசு பஸ் டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அண்மையில் கடலூர் பகுதியில், அரசு பஸ்சின் முன் பக்க டயர் வெடித்து, கார்கள் மீது பஸ் மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர். இச்சம்பவத்தின் எதிரொலியாக தமிழக அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, அரசு போக்குவரத்து கழகம் மேட்டுப்பாளையம் கிளையில், கிளை மேலாளர் பூர்ண சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பஸ்களின் பராமரிப்பு குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின் டிரைவர்கள், கண்டக்டர்களை அழைத்து செல்போன் பேசியப்படி வாகனம் இயக்கக் கூடாது, செல்போனில் ஹெட்செட், ப்ளூ டூத் உள்ளிட்டவற்றை இணைத்து, காதில் அந்த இயந்திரங்களை வைத்து பேசியப்படி அல்லது பாடல்கள் கேட்டப்படி வாகனம் இயக்கக்கூடாது. பஸ்கள் இயக்கும் போது இயந்திர கோளாறு ஏற்பட்டால், உடனடியாக பஸ்சை நிறுத்தி, கிளை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தூக்கம் வந்தால் பஸ்களை இயக்கக்கூடாது. இவ்வாறு, அறிவுரைகள் வழங்கப்பட்டன. டிரைவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கிளை மேலாளர் பூர்ண சந்திரன் கூறுகையில், அரசு பஸ் டிரைவர்கள், பஸ்சில் இருக்கும்போது செல்போன் பயன்படுத்தினால் பொதுமக்கள் 04254-222931 என்ற எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை