| ADDED : ஜன 08, 2024 01:21 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே அரசுப்பள்ளி மாணவர்கள், இன்ப சுற்றுலாவாக, கோவைக்கு ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டனர்.பொள்ளாச்சி அருகே கோடங்கிப்பட்டி மற்றும் மண்ணுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், இன்ப சுற்றுலா பயணமாக கோவைக்கு சென்றனர்.பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, கோவைக்கு பயணம் செய்தனர். ரயில் பயணம் குறித்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.தொடர்ந்து, கோவையில் உள்ள காவலர் அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்த்தனர். பீரங்கி டாங்கு வகைகள், போர் விமானம், நீர் மூழ்கி கப்பல், ஹோவர் கிராப்ட் மற்றும் பலவித துப்பாக்கிகள், தோட்டாக்கள், சீருடைகள், புலனாய்வு உபகரணங்கள், தொழில் நுட்ப கருவிகள் பல்வேறு ராணுவ அதிகாரிகள் கொண்ட மாதிரி பொம்மைகள், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பல விதமான தொலைத்தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றின் பயன்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.அதில், மண்ணுார் பள்ளி தலைமையாசிரியர் ஜோதிலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சத்தியா மற்றும் ஆஷா ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் தினகரன் ஒருங்கிணைத்தார்.