உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம் ஒதுக்கீடு
கோவை; மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி அறிக்கை: வேளாண் பட்டதாரிகளின் படிப்பறிவும், தொழில்நுட்பத் திறனும் உழவர்களுக்கு உதவியாக இருந்து, வேளாண் உற்பத்தியை உயர்த்த, 1,000 உழவர் நல சேவை மையங்கள் அமைப்பதற்கு ரூ.42 கோடி ஒதுக்கப்பட்டது. ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான மதிப்பில், இம்மையங்கள் அமைக்கப்படும். இதில், 30 சதவீதம் அதாவது ரூ.3 லட்சம் முதல் 6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்கப்படுவதோடு, வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்குத் தேவையான ஆலோசனை வழங்கப்படும். நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல் குறித்த ஆலோசனை வழங்கப்படும். இம்மையங்களைச் சிறப்பாக நடத்த, வேளாண் உழவர் நலத்துறையில் அனைத்து உரிமங்களும் வழங்கப்படும். கோவை மாவட்டத்தில் 16 மையங்கள் அமைக்கப்படும். 20 முதல் 45 வயதுக்கு உட்பட்ட வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள், விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். கடன் ஒப்புதல் பெற்றதும், மானிய உதவிக்காக htpps://www/magrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.