உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு பச்சை கம்பள வரவேற்பு!முதல் மாதமே 83 சதவீத சீட் நிறைவு

பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு பச்சை கம்பள வரவேற்பு!முதல் மாதமே 83 சதவீத சீட் நிறைவு

-நமது நிருபர்-அதிகாலை நேரத்தில் புறப்பட்டாலும், கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயிலில், ஜனவரியில் 83 சதவீதம் இருக்கைகள் நிறைந்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது.கோவை-பெங்களூரு இடையே, கடந்த ஜன.,1லிருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் 478 ஏ.சி., சேர் கார் இருக்கைகளும், 52 எக்ஸிகியூட்டிவ் சேர் கார் இருக்கைகளும் உள்ளன. இதற்கு முறையே, ரூ.1025 மற்றும் ரூ.1930 டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த ரயில், அதிகாலை 5:00 மணிக்கு, கோவையில் புறப்பட்டு, மதியம் 11:30 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. அங்கிருந்து, மதியம் 1:40 மணிக்கு புறப்பட்டு, இரவு 8:00 மணிக்கு, கோவை வந்தடைகிறது. கோவையில் இந்த ரயில் புறப்படும் நேரம், அதிகாலை நேரமாக இருப்பதால், இதற்கு வரவேற்பு கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்தது.ஆனால் கடந்த ஒரு மாதத்தில், வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை, இதற்கான தேவையையும், வரவேற்பையும் உணர்த்தியுள்ளது. வாரத்தில் ஆறு நாட்கள் வீதமாக, கடந்த ஜனவரியில் 27 நாட்கள் இந்த ரயில் இயக்கப்பட்டுள்ளது. இந்த 27 நாட்களில், கோவை-பெங்களூரு டிரிப்பை மட்டும் கணக்கிட்டால், 12 ஆயிரம் பேர் வரை பயணம் செய்துள்ளனர்.அதாவது, 10 ஆயிரத்து 746 பேர், ஏ.சி., சேர் கார் இருக்கைகளிலும், 1164 பேர், எக்ஸிகியூட்டிவ் சேர் கார் இருக்கைகளிலும் பயணம் செய்துள்ளனர். இது ஒட்டு மொத்த இருக்கை எண்ணிக்கையில், 83.23 சதவீதம் நிறைந்துள்ளதைக் காண்பித்துள்ளது. கோவையிலிருந்து பெங்களூரு செல்லும் டிரிப்களில் மட்டுமே, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளது.

இன்னும் கொஞ்சம் மாறணும்!

இந்த ரயில், கோவையிலிருந்து அதிகாலை 5:00 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக காலை 6:10 மணிக்குப் புறப்படும் வகையிலும், பெங்களூரிலிருந்து மதியம் 1:40 மணிக்குப் பதிலாக மாலை 3:00 மணிக்குப் புறப்படும் வகையிலும், மாற்ற வேண்டும். அதேபோல, தற்போதுள்ள பயண நேரத்தை 6:30 மணி நேரத்துக்குப் பதிலாக, 5:50 மணி நேரமாகக் குறைக்க வேண்டியதும் அவசியம்.அப்படிக் குறைத்தால், இந்த ரயில் பெங்களூருக்கு காலை 10:50 மணிக்குப் போய் விடும்; அதேபோல, இரவு 8:50 மணிக்கு கோவைக்கு வந்து விடும். இதனால், இரு வழித்தடங்களிலும் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்; அப்போது 100 சதவீத இருக்கைகளும் நிறைந்து விடுமென்பது உறுதி.ஆனால் புறப்பாடு மற்றும் பயண நேரத்தை மாற்றுவதற்கு, ரயில்வே நிர்வாகம் மறுத்து, முரண்டு பிடிப்பதுதான் புரியாத புதிராகவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை