உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துணைவேந்தர் நியமனத்திற்கு பச்சைக்கொடி

துணைவேந்தர் நியமனத்திற்கு பச்சைக்கொடி

கோவை:பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில், கவர்னர் ரவி நியமித்த, நான்கு பேர் கொண்ட தேடல் குழு சார்ந்த அறிவிப்பு, வாபஸ் பெறப்பட்ட நிலையில், தமிழக அரசு புதிய துணைவேந்தரை நியமிக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.பாரதியார் பல்கலையில் 2022 அக்., முதல் துணைவேந்தர் பணியிடம் காலியாகவுள்ளது. பல்கலை சிண்டிகேட் தரப்பில் சில மாதங்களுக்கு முன்பே, மூன்று பேர் கொண்ட துணைவேந்தர் தேடல் குழு நியமித்து, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.ஆனால், நீண்ட இழுபறிக்குப் பின் கவர்னர், பல்கலை தரப்பில் வழங்கப்பட்ட தேடல் குழுவில், நான்காம் நபராக யு.ஜி.சி., நாமினி ஒருவரை சேர்த்து, நான்கு பேர் கொண்ட தேடல் குழுவை, கடந்த 2023 செப்., மாதம் அறிவித்தார். இதற்கு மாநில அரசு மற்றும் பல்கலை சிண்டிகேட் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.சட்டநடைமுறைகளின் படி, பல்கலை சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, மாநில அரசின் அரசிதழில் வெளியிட்டால் மட்டுமே, தேடல் குழுவில் மாற்றங்கள் கொண்டுவர இயலும்.இந்நிலையில், கவர்னருக்கு எதிராக, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இப்பிரச்னை குறித்தும் சுட்டிகாட்டப்பட்டது. இப்பிரச்னை குறித்து ஆலோசனை மேற்கொள்ள, கவர்னர் ரவிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதை தொடர்ந்து கவர்னரின் அழைப்பின் பேரில், தமிழக முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பாரதியார் பல்கலை உட்பட மூன்று பல்கலைகளுக்கு கவர்னர் அறிவித்து இருந்த, நான்கு பேர் கொண்ட தேடல் குழு, நேற்று முன்தினம் மாலை வாபஸ் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியானது.கவர்னரின் முடிவுக்கு பேராசிரியர் சங்கங்கள் வரவேற்பை தெரிவித்துள்ளன. மாநில அரசு உடனடியாக, துணைவேந்தர் நியமன செயல்பாடுகளை மேற்கொள்ள கல்வியாளர்கள், பேராசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து, பல்கலை ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், '' மாணவர்களின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள, கவர்னரின் இம்முடிவு வரவேற்புக்குரியது. மாநில அரசு உடனடியாக, துணைவேந்தர் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை