உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குஜராத், ஆக்ரா உருளைக்கிழங்குகளுக்கு மவுசு பிற மாநில, மாவட்டங்களில் இருந்து வரத்து குறைவு

குஜராத், ஆக்ரா உருளைக்கிழங்குகளுக்கு மவுசு பிற மாநில, மாவட்டங்களில் இருந்து வரத்து குறைவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு, ஆக்ரா மற்றும் குஜராத் கிழங்குகளின் வரத்து அதிகரித்துள்ளது. பிற மாநில, மாவட்ட கிழங்குகள் வரத்து குறைந்துள்ளதால், ஆக்ரா, குஜராத் உருளைக்கிழங்குகள் விலை உயர்ந்து விற்பனையாகின்றன.மேட்டுப்பாளையம் காந்தி மைதானத்தில், 70க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்படும் உருளைக்கிழங்குகள் தரம் பிரித்து விற்பனை செய்யப்படுகின்றன.தினமும் மண்டிகளுக்கு வரும் உருளைக்கிழங்குகளில், 50 சதவீதம் கேரளா மாநிலத்துக்கும், 20 சதவீதம், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. 30 சதவீதம் வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, குன்னுார், கூடலுார், ஈரோடு மாவட்டம் திம்பம், தாளவாடி, கேர்மாளம், கர்நாடக மாநிலம் உடையர்பாளையம், சாம்ராஜ் நகர், குஜராத் மாநிலம் கோலார், ம.பி., மாநிலம் இந்துார், உ.பி., மாநிலம் ஆக்ரா உட்பட பகுதிகளில் இருந்து தினமும் 1,700 முதல் முதல் 2,000 டன் வரை உருளைக்கிழங்குகள் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.தற்போது, ஊட்டி கிழங்குகளின் வரத்து குறைந்துள்ளது. ஆக்ரா மற்றும் குஜராத் உருளைக்கிழங்குகள் தான் அதிகம் மார்க்கெட்டுக்கு வருகின்றன. பிற மாநிலம், மாவட்ட உருளைக்கிழங்குகளின் வரத்து குறைவால், ஆக்ரா, குஜராத் கிழங்குகளுக்கு மவுசு கூடியுள்ளது. இதுகுறித்து, மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு வியாபாரிகள் கூறியதாவது:தற்போது, மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு, ஆக்ராவில் இருந்தும், குஜராத்தில் இருந்தும் தான் அதிகம் உருளைக்கிழங்குகள் வருகின்றன. இந்துார், நீலகிரி மாவட்டம் ஊட்டி, ஈரோடு மாவட்டம் திம்பம், கர்நாடக மாநிலம் கோலார் உள்ளிட்ட இடங்களில் இருந்து கிழங்குகள் வரத்து குறைந்து விட்டன. இதனால், ஆக்ரா மற்றும் குஜராத் கிழங்குகளின் விலை உயர்ந்து விற்பனை ஆகிறது.45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ஆக்ரா கிழங்குகள், ரூ.900 முதல் ரூ.950 வரையும், குஜராத் கிழங்குகள் ரூ.800 முதல் ரூ.850 வரையும் விற்பனையாகிறது.கடந்த காலங்களில் இச்சமயத்தில் ஆக்ரா கிழங்குகள் ரூ.750 வரை மட்டும் விற்பனை ஆன நிலையில், தற்போது விலை உயர்ந்துள்ளது. குஜராத் கிழங்குகளும் முட்டைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை உயர்ந்துள்ளன.ஆக்ரா கிழங்குகள் தினமும் 400 டன் வரை வருகின்றன. இனி வரும் நாட்களில் 600 முதல் 800 டன் வரை வரும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, வியாபாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை