உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வாக்காளர் படிவத்தில் சந்தேகம் தீர்க்க மாலை 3 - 6 மணி வரை உதவி மையம்

 வாக்காளர் படிவத்தில் சந்தேகம் தீர்க்க மாலை 3 - 6 மணி வரை உதவி மையம்

கோவை: வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்வதில், பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, பள்ளி வேலை நாட்களில் மாலை 3 முதல் 6 மணி வரை, அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் இருந்து, நிவர்த்தி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிக்கு வினியோகித்த படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, திரும்ப பெறப்படுகின்றன. 2002/ 2005ல் பட்டியல் திருத்தப் பணி செய்தபோது, வாக்காளராக இருந்திருந்தால், அதைப்பற்றிய தகவலும், இல்லாமல் இருந்தால் தாய், தந்தை அல்லது தாத்தா, பாட்டி போன்ற உறவினர்கள் எந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர் என்கிற விபரம் முக்கியமாக கேட்கப்படுகிறது. இந்த விபரங்களை அனைத்து தரப்பு வாக்காளர்களாலும் நிரப்ப முடிவதில்லை; பலருக்கும் படிவத்தை பூர்த்தி செய்யத் தெரியாததால், உதவி மையங்கள் அமைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி கோவை மாவட்டத்திலும் மையங்கள் அமைப்பது தொடர்பாக, தேர்தல் பிரிவினருடன் ஆலோசிக்கப்பட்டது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், பில் கலெக்டர்கள், சுகாதார அலுவலர்களே நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் நாள் முழுவதும் ஓட்டுச்சாவடியில் இருந்தால், கல்வி கற்பிப்பது, உணவு சமைப்பது போன்ற வழக்கமான பணிகள் பாதிக்கும் என தேர்தல் பிரிவினர்தெரிவித்தனர். அதனால், மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளில், பள்ளி வேலை நாட்களில் மாலை 3 முதல் 6 மணி வரை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் இருந்து, கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்ய வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த படிவங்களை, அதற்கான செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

வாக்காளர் இல்லாவிட்டால்

செயலியில் குறிப்பிடணும்!

உதாரணத்துக்கு, ஒரு ஓட்டுச்சாவடியில், 1,200 வாக்காளர்கள் இருக்கிறார்கள். 900 வாக்காளர்களுக்கு படிவம் வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 300 பேருக்கு வழங்க, மூன்று முறை முயற்சிக்க வேண்டும். முடியாத பட்சத்தில், வீட்டில் நிரந்தரமாக இல்லையா, இறந்து விட்டாரா, முகவரி மாறிச் சென்று விட்டாரா (Absent, Death, Shifted) என விசாரித்து, செயலியில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அந்த ஓட்டுச்சாவடியில் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்களோ, அத்தனை பேரின் விபரங்களும் செயலியில் இருக்க வேண்டும். படிவம் வழங்கியிருந்தால், பூர்த்தி செய்து, பதிவேற்றம் செய்திருக்கவேண்டும். இல்லையெனில், அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டும் என அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை