பழமையான பாரம்பரியம் மிக்க கட்டடங்களை வைத்திருக்கும் பலர், அதை பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் அதிக பொருட்செலவு ஏற்படும் என்று நினைத்து, அதிலிருந்து நழுவி விடுகின்றனர்.அதை தவிர்த்து, எளிதாகவும் அதிக பொருட்செலவின்றியும் எப்படி பராமரிக்கலாம் என்பது பற்றி விளக்குகிறார், கோவையிலுள்ள பிரபல கட்டட கட்டுமான பொறியாளர் குருவாயூரப்பன்.ஒரு நாட்டின் முக்கிய அடையாளமே, அங்குள்ள பாரம்பரிய கட்டடங்கள் என்று சொல்லலாம். ஆனால் பெரும்பாலான பாரம்பரிய கட்டடங்கள், பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து கிடைக்கின்றன.இவற்றை பராமரிக்க, செலவு அதிகமாகும் என்பதாலும், வணிக கட்டடங்களாகவும், குடியிருப்பு கட்டடங்களாக மாற்றுவதற்காக, அவை இடிக்கப்படுகின்றன.எவ்வளவு பெரிய கட்டடத்தையும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நொடிப் பொழுதில் இடித்து விடலாம். ஆனால் அவற்றை கட்ட, பல ஆண்டுகள் வரை ஆகும். குறைந்த செலவிலேயே இந்த பாரம்பரிய கட்டடங்களை பராமரித்து பாதுகாக்கலாம்.பாரம்பரிய கட்டடத்தில் மிக அதிகமாக காணப்படும், மரவேலைப்பாடுகளுக்கு இடையே இருக்கும் கரையான் உள்ளிட்ட பூச்சிகளால், கட்டடங்கள் பாதிக்கப்படுகின்றன. பராமரிப்பது எப்படி?
மரத்தினால் ஆன கூரை, நிலவு, ஜன்னல் மற்றும் மாடிப்படிக்கட்டுகளில், நல்ல மரங்களை பயன்படுத்த வேண்டும். அதற்கு செலவு அதிகரிக்கும்.கட்டடத்தின் எந்த இடங்களிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஓட்டுக் கூரையில் மரக்கட்டைகள் உடைந்திருந்தால், மாற்றுவதற்கு நல்ல மரங்களை பயன்படுத்த வேண்டும். கூடுதலாக செலவாவதை பற்றி கவலை கொள்ளக்கூடாது.ஓட்டுக் கூரையில் மரக்கட்டைகளுக்கு பதிலாக, இரும்பு பைப்புகளை பயன்படுத்தலாம். மரத்தை பாலீஷ் செய்தால் என்ன தோற்றம் கிடைக்குமோ, அதே தோற்றத்துடன் இரும்பு பைப்பில் பெயின்ட் மூலம் குறைவான செலவில், மர தோற்றத்தை ஏற்படுத்தலாம்.உடைந்த ஓடுகள் வழியாக, உள்ளே தண்ணீர் நுழைவதை தடுக்க, இரும்பு பைப்பிற்கு மேலே தகடு அமைத்து, அதன் மேலே அலுமினிய ஆங்கிள் அமைத்து, பின்பு ஓடுகளை பரப்புவதால் ஓடுகள் உடைந்தாலும், தண்ணீர் உள்ளே செல்லாமல், தகடு மூலமாக வெளியேறிவிடும்.கட்டடத்தின் உள்ளிருந்து, மேற்கூரையை பார்க்கும் போது தகடு தெரியாமலிருக்க மரப்பலகை போன்ற தோற்றமுடைய அலுமினிய தகடு, பி.வி.சி.,அட்டை போன்ற பொருட்களை பயன்படுத்தலாம். ஜன்னல் மற்றும் கதவுகளை, இரும்பு மற்றும் தகடுகளால் தயாரித்து அதற்கு மரத்தோற்றத்தில் பெயின்ட் அடிக்கலாம்.தரை தளம் அமைக்க, பழமை மாறா வண்ண டைல்ஸ், கரையான் தடுக்க கரையான் மருந்துகளை உள்ளேயும், வெளியேயும் அடிக்கலாம். பழமை மாறாமல் இருக்க, பழமையான தோற்றமுடைய பெயின்ட் அடிக்கலாம். அலங்கார விளக்குகளும் பொருத்தலாம். இது போன்று குறைந்த செலவில், நமது பாரம்பரிய கட்டடங்களை பராமரித்து பாதுகாக்கலாம். இது இன்றைய தலைமுறையின் தலையாய கடமையாகும்.இவ்வாறு, பொறியாளர் குருவாயூரப்பன் கூறினார்.