| ADDED : மார் 15, 2024 12:19 AM
கோவை;மாவட்ட அளவில் நடக்கும் இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான கிரிக்கெட் அரையிறுதியில் சி.ஐ.டி., கல்லுாரியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்துஸ்தான் கல்லுாரி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.மாவட்ட அளவில் இன்ஜி., கல்லுாரிகளுக்கு இடையேயான 'கோவை டைஸ்' விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக கிரிக்கெட் போட்டி கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரியில் நடக்கிறது.இதன் முதல் அரையிறுதியில் சி.ஐ.டி., மற்றும் இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணிகள் போட்டியிட்டன. முதலில் பேட்டிங் செய்த சி.ஐ.டி., அணியின் துவக்க வீரர் அகிலன் (63) அரைசதம் அடிக்க சி.ஐ.டி., அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது.இறுதிப்போட்டிக்கு தகுதி பெற 130 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய இந்துஸ்தான் அணிக்கு குணா உதவினார். அவர் நிதானமாக விளையாடி 48 ரன்கள் சேர்த்தார். இந்துஸ்தான் அணி 18.2 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 130 எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.